Wednesday, July 8, 2020
அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"
அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி
வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு
செய்ய ஏற்றவை.
பொதுவாக அரளிச் செடிகள், குச்சிகள்
மூலமாக பதியம் செய்யப்படுகின்றன. ஆனால்,
விதைகள் மூலமாக நடவு செய்வது அதைவிட வெற்றிகரமாக அமையும்.
அரளிச் செடி பூத்து முடிந்ததும், சுமார் ஆறு
அங்குல நீளத்துக்கு காய்கள் (விதைப் பைகள்) உருவாகும். அவை எருக்கன் காய்களைப் போல
பஞ்சுக்குள் பொதிந்து கிடக்கும். காய்கள் வெடித்துச் சிதறி பறந்து சென்று தன்னை
மீட்டெடுத்துக் கொள்ளும் வசதிக்கான அமைப்பு இது.
அரளிக் காய்கள், தோற்றத்தில்
ஏறக்குறைய கொத்தவராங்காய் போல இருக்கும்.
காய்ந்த அரளிக் காய்களிலிருந்து
விதைகள் எடுப்பதும் எளிதுதான். ஆனால்,
அரளிச் செடி ஓரளவு நச்சுத் தன்மை கொண்டதால், வெறும் கையால் விதைகளைப் பிரித்தெடுக்கும்போது, நமைச்சல்
போன்ற தோல் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால்,
தோட்ட வேலைகளுக்கு பயன்படும் கையுறைகளை பயன்படுத்துவதே சிறந்தது.
பிரித்தெடுக்கப்பட்ட விதைகளில்
நல்ல வளமான விதைகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். அப்படி நடவு செய்வதற்கு
ஏதுவாக காலியான இனிப்பு பெட்டகங்களை (Sweet
Container Box) பயன்படுத்தலாம்.
இந்த காலியான இனிப்பு
பெட்டகங்களில், அடிப்புறம்
வடிகால் வசதிக்காக, நாலைந்து
துளைகளை இட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பெட்டகத்தின் முக்கால் பகுதி
தென்னங்கழிவுத் தூளையோ (Coco
Peat) அல்லது நன்றாக மக்கிய தொழு உரம் கலந்த இளகிய தோட்ட மண்ணையோ
நிரப்பி கொள்ள வேண்டும்.
மண்ணை ஈரமாக்கி விதைகளை மண்ணின்
மேற்புறமாக இலேசாக அழுத்திவிட்டு அந்த பெட்டகத்துக்கு மூடியிருந்தால் மூடியையோ
அல்லது நெகிழி தாளையோ வைத்து காற்றுப் புகாமல் மூடிவிட வேண்டும்.
இப்படி சீல் செய்யப்பட்ட
பெட்டகத்தை வெய்யிலும்,
நிழலும் கலந்த ஒரு சூழலில் வைத்துவிட வேண்டும்.
சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது, விதைகள்
ஊன்றிய பெட்டகத்தை திறந்து பார்த்து ஈரம் உலராமல் ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும்.
இத்தகைய கண்காணிப்புடன்
ஊன்றப்பட்ட விதைகள் ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் முளைக்க
ஆரம்பிக்கும்.
அரளி விதைகள் முளைக்கத்
தொடங்கியதும் மூடப்பட்ட நெகிழியையோ அல்லது மூடியையோ எடுத்துவிட வேண்டும்.
நான்கைந்து இலைகள் விட்டு
வளர்ந்த அரளிச் செடியை அதன் பிறகு தனி தொட்டிக்கு மாற்றி கொள்ள முடியும்.
Friday, July 3, 2020
வலையொளியில் எனது பயணம்
நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல வசீகரமும், ஈர்ப்பும், குறிப்பிடத்தக்க
ஆளுமைகளும் என்னிடம் இல்லை என்பதை
உறுதியாக அறிவேன். ஆனால்,
உண்மைகளை வெளிக்கொணர,
உண்மைகளை மட்டும் பேசும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்
என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறேன்~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''
அன்பு தோழர் - தோழியருக்கு வாழ்த்துகள்!
வலையொளியில் (YouTube)
பாமரன் நியூஸ் Pamaran
News https://www.youtube.com/channel/UCzPPNS7B6m5ydvB98g8xNlQ என்றொரு
சானல் இருப்பதை தாங்கள் அறிவீர்கள்.
அக்.7,
2008 – இல்,
ஆரம்பி்க்கப்பட்ட இந்த கணக்கு,
சென்னை ராயப்பேட்டை காப்பி கேப் ஒன்றில் காப்பி அருந்தியவாறு எனது லாப்
டாப்பில் எனது உறவினர் இளைஞர் ஒருவர் ஆலோசனையின் பேரில் அதன் பிறகு சில
ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெற்றது.
அப்போதெல்லாம் வலையொளி அவ்வளவாக சமூகத்தில் பிரபலம்
அடைந்திருக்கவில்லை. தமிழ் மொழியும் மானிடைஸ்ஸீக்காக அங்கீகரிக்கப்படவில்லை.
இருந்தாலும்,
சில ஆயிரம் ரூபாய் கொண்ட படப்பிடிப்பு கருவிகளால், நாமே
ஒற்றையாய் தலைமைத் தாங்கி,
ஒத்த சிந்தனையாளர்களை ஒன்றுபடுத்தி இயக்குநராக, ஒளிப்பதிவாளராக,
படத்தொகுப்பாளராக,
சில நேரங்களில் கதைச் சொல்லியாக என்று பன்முகங்களில் செயல்பட முடியும் என்று
நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு அது.
சோம்பி கிடக்கும் இளைஞர்களுக்கும், நம்மால்
முடியவில்லையே என்று ஏங்கும் இளைஞர்களுக்கும் இப்படி செய்யலாம்; நீங்கள்
செய்ய மறுப்பதேன்? என்று
வினாக்களை எழுப்பிய தருணம் அது.
காமிராவுக்கு முன் நிற்கும் எந்த வசீகரமும், சொல் ஈர்ப்பும்
இல்லாத நிலையிலும், என்னால்
முடிந்ததை செய்து காட்டி,
இளைஞர்களை செய்ய வைக்க வேண்டும் என்ற துடிப்பு பல மாவட்டங்களுக்கு பயணிக்க
வைத்த காலம் அது.
இந்த துடிப்பும்,
தாகமும் காடு, மேடெல்லாம்
அலைய வைத்தது. ஓரிரு கல்லூரி மாணவர்களை இணைத்து அவர்களுக்கும் எனக்குத் தெரிந்ததை
எல்லாம் கற்றுக் கொடுத்து ‘விழிகள்’ என்ற
குழுவாய் பயணிக்க காலம் கொடுத்த வாய்ப்பு அது.
ஒரு கட்டத்தில் அந்த ஓரிருவரும் பொருள் தேடல்களுக்காக என்னை
விட்டு விலகியபோதும்,
தளராமல் ஒற்றை ராணுவ வீரனாய் என் குறிக்கோளிலேயே குறியாக இருக்க வேண்டி
வந்தது.
விழிப்புணர்வற்ற ஒரு சமூகத்தின் பிள்ளை நான். அதிலும், குழு
மனப்பான்மையோடு செயல்படும் சமூகத்தில் எனக்கென்று ஆதரவு தந்தவர் வெகு சொற்பமானவரே!
அதுவும், வானத்துக்கு
கீழாகவும், பூமிக்கு
மேலாகவும் உள்ள அனைத்தையும் படங்களாய்,
ஆவணங்களாய் அடக்க நினைத்த எனதாசைக்கு ஒத்துழைப்பும், ஆதரவும்
குறிப்பிடத்தக்கதாக இல்லை.
ஆனாலும். ஊடகம் என்னும் பெரும் கனவுகளும், சாதிக்க
வேண்டும் என்ற பெரும் வெறியும் இந்த ஒற்றை
ராணுவ வீரனை முன் தள்ளியவாறே இருந்தது.
இளம்தலைமுறையை வார்த்தெடுக்க, காமிராவின் முன் நிற்க பிடிக்காவிட்டாலும் அதன் முன் நின்று
கதை சொன்னேன்.
குழந்தைகளின் கற்பனையைத் தூண்ட அவர்களிடையே கதை சொல்ல
வைத்தேன்.
சமூகங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க குறும்படம்
எடுத்தேன்.
சூழல் மாசுவுக்கு எதிராக ஆவணங்களைப் பதித்தேன்.
இருளர்,
குயவர், உழவர், மீனவர் என்று
சமூகத்தின் விளிம்புநிலை வாழ்வியல் போர் நடத்தும் ஒடுக்கப்படுவோரின் குரலை
ஆவணப்படுத்தினேன்.
நடப்பு நிகழ்வுகளை பதிவுகளாக்கினேன்.
புகழனைத்தும் இறைவனுக்கே! இதில் எதையும் ஆதாயம் கருதி, பொருள் தேடி
நான் செயல்பட்டதேயில்லை.
இடை இடையே குழுவாய் செயல்பட கிடைத்த வாய்ப்புகளும் என்னோடு
ஒன்றி போகாததால் மீண்டும் ஒற்றையாகிப் போனதுதான் மிச்சம்.
இப்படியான எனது வலையொளிப் பயணத்தில் நான் உங்களோடு உரையாடும்
இந்த தருணம்வரை வலையொளியின் எனது பயணம் 682
பதிவுகளாகவும், எனது
பதிவுகளை பார்வையிட்டவர்கள் 684,869
பேராகவும், எனது
பதிவுகளின் சந்தாதாரர்கள் (Subscribers)
7.97K என்ற அளவிலும் கடந்து வந்திருக்கிறேன்.
கடைசியாக எனது பதிவுகள், பறவைகளும்,
இயற்கையுமாய் என்றாகியுள்ள தற்போதைய ஊரடங்கு சூழலில் நமது வெகுஜன ஊடகங்களில்
பெரும்பான்மை ஊடகங்கள் வாய்த்திறக்காத பக்கங்களை திறந்து காட்ட பாமரன் நியூஸ்
சானலின் இணை சானல் ஒன்று இறைவன் நாடினால்,
ஆரம்பிக்க நினைக்கிறேன்.
இன்னும் அதற்கான பெயர் முடிவாகாத நிலையில், இந்த சானல்
முற்றிலும் அரசியலுக்கான சானல் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல வசீகரமும், ஈர்ப்பும், குறிப்பிடத்தக்க
ஆளுமைகளும் என்னிடம் இல்லை என்பதை
உறுதியாக அறிவேன். ஆனால்,
உண்மைகளை வெளிக்கொணர,
உண்மைகளை மட்டும் பேசும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்
என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறேன்.
வழக்கம் போல,
வாருங்கள் என்று யாரையும் அழைக்கப் போவதில்லை.
அந்த அழைப்பு செயற்கையாக நினைக்கப்படுமோ என்ற அச்சத்தில், விரும்பியோர்
என்னோடும், என்
பணிகளோடும், அந்தப்
பணிகள் தடைப்படாத ஆலோசனைகளோடும்,
ஒத்துழைப்பு களோடும் என்னோடு இணையலாம்.
இது ஒற்றை ராணுவ தலைமையின் கீழான அணிவகுப்பு என்பதை மட்டும்
நினைவில் கொள்க.
நம்பிக்கையுள்ளோர் பிரார்த்தியுங்கள். நம்பிக்கையற்றோர்
வாழ்த்துங்கள்!
நன்றி தோழர்,
தோழியரே!
கொரோனா தீ நுண்மியிடமிருந்து பாதுகாப்புடன் இருந்து
கொள்ளுங்கள்.
Friday, June 26, 2020
சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26,
சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள் ளோருக்கு ஆதரவு தரும்
நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள்.
தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து
சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர
வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''‘’
இரவெல்லாம் தூக்கம் வரவில்லை எனக்கு!
அப்படி என்னதான் செய்துவிட்டார்கள் ஜெயராஜும், பென்னிஸீம்?
இந்தளவு கொடுமை இழைக்குமா சொந்த நாட்டின் சொந்த போலீஸ்?
நம்பவே முடியவில்லை!
ஒரேயடியாக சுட்டு கொன்றுவிட்டிருக்கலாம்!
அந்த சித்திரவதை வலியின் வேதனை தெரியாமலிருக்க.. கண நேரத்தில் பாயும்
தோட்டாவின் வலியோடு எல்லாம் முடிந்திருக்கும்?
துடிக்க.. துடிக்க.. கதற.. கதற.. அண்டை. அயலாரின் காதுகள் செவிடாகி போனதேன்?
எல்லாம் அறியாமையும், சுயநலமும் ஒருசேர வாய்க்க பெற்ற சுயநல மக்களின் ஜனநாயக அமைப்பில் அவரவர்
கால்களில் படும்போதுதான் வலி தெரியும் போலும்!
குற்றவாளிகளாயினும்,
தண்டனை அளவீடு மிஞ்சுவதில்லை எங்கும்!
அரசு
பதக்கங்களும், பாராட்டுகளும், பதவி உயர்வுகளும், சாதீய அமைப்புமான அரசியல் சமூக
அமைப்பில் இந்த அதிகார அத்துமீறல்கள் கட்டுக்கடங்காதவை!
தலைக்காய்ந்தவர்களும்,
சாமான்யர்களும் வாழ தகுதியற்றவர் என்கிறதா இந்த அதிகார அத்துமீறிய அரசியல்
அமைப்பு? அல்லது ஒவ்வொரு கணமும் இருப்புகளுக்கான போராட்டமும், விழிப்புணர்வூட்டும்
மக்களுக்கான தலைமையும் அவசியம் என்கிறனவா சாத்தான்குளம் படுகொலைகள்?
ஒரு ஜார்ஜ்
பிளாய்ட் மூச்சுவிட திணறி இனவெறியனால் கொல்லப்பட்டதற்கு ஒட்டுமொத்த அமெரிக்க
சமூகம் திரண்டு நின்றதே தெருக்களில்! நீதி கேட்டு நடந்த அந்த உக்கிர மக்கள்
திரள்முன் மண்டியிட்டதே அதிகாரம்! நம்மால் ஏன் செய்ய முடியவில்லை! காரணங்களின்
முடிவில் தீர்வாய் தடைபோட்டு நிற்பது அதே தன்னலம்தான்!
வலி பொறுக்க முடியாமல், ஓங்கி.. ஓங்கி
ஒலிக்கின்றன பெரியவர் ஜெயராஜின், தம்பி பென்னிஸின் ஓலங்கள்! அதோ தெரித்து
சுவர்களில் ஒட்டிக் கொள்கின்றன பிய்ந்தபோன அவர்களின் முன்பின் மறைவான அவையங்களின் நுண்ணிய
ரத்தம் தோய்ந்த தசைகள்!
இதே வேதனை, இதே
தண்டனை ஆட்சியாளர் முதற்கொண்டு கடைநிலை அதிகாரம்வரை பெற வேண்டாமா? அவர்களின்
ஒவ்வொரு அணுத்துகள்களும் அதேஅளவு வேதனையை அனுபவிக்க வேண்டாமா? அதுதானே சமநீதி!
அதுதானே பாதிக்கப்பட்டவரின் இழப்புக்கான முதல்நிலை இழப்பீடாக இருக்க முடியும்?
மீண்டும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும்?
நாகரீக சமூகம்
என்று சொல்லிக் கொண்டு ஒரு காட்டுமிராண்டி
சமூகத்தின் நுழைவாயிலில் நிற்கிறோமோ நாம்!
இந்த அதிகார
வெறிப்பிடித்த கொடுமைக்கார்ரகளைவிட கொரோனோ எவ்வளவோ மேல்!
''''''''''''''''''''''''''''












