Thursday, November 12, 2015
Wednesday, November 11, 2015
பீகார் தோ்தல்களும், முஸ்லிம்களின் மனோநிலையும்!
பீகார் சட்டமன்ற தோ்தல்களில் மதவாத சக்திகளுக்கு எதிராக அந்த மாநில மக்கள் ஒன்றுபட்டு பிஜேபியை தோற்கடித்தார்கள். அதேபோலவே பீகாா் மாநில முஸ்லிம்களும் ஒன்றுபட்டார்கள். அஸதுத்தீன் உவைஸியையும் அவரது அகில இந்திய மஜ்லிஸே இஹ்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியையும் தோற்கடித்தார்கள். இது அவா்களின் முதிர்ச்சியைத்தான் காட்டியது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு தொகுதிகளிலும் மஜ்லிஸ் போட்டியிட்டது. அந்த ஆறு தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அவா்களைத் தோற்கடித்த முஸ்லிம்கள், தங்கள் மதசா்பற்ற அசல் முகங்களை இந்தியாவுக்குக் காட்டினார்கள். தாங்கள் எப்போதுமே மதசார்பற்றவாதிகள்தான் என்றும் அதுதான் தேசத்தின் தேவையும் என்றும் அதன் மூலம் செய்தியை அழுத்தமாக சொன்னார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்ற இயக்கங்கள் எப்போதும் மக்களை துண்டாடுவதில்லை. அனல் கக்கும் சொற்பொழிவுகளை ஆற்றி மக்களை உணா்ச்சிவபசப்படுத்துவதில்லை. சிவசேனை மற்றும் பஜரங்தளம் போன்ற இனவாத கட்சிகளின் பிரதிபிம்பங்களாகவும் இருந்ததில்லை. சாத்வி, தொகாடியா போன்றவா்களின் ஆக்ரோஷ நச்சுக்கருத்துகள் போல மேடைகளில் முழங்குவதுமில்லை.
சட்டமன்ற தோ்தல்களுக்கு முன்னர் ஊராட்சி ஒன்றிய தோ்தல்களில் இந்த அமைப்புகளின் தலைவா்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக மக்களிடையே தொடா்புகளை வலுப்படுத்தியிருந்தார்கள். சமூகத்தில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களிடையே நல்லிணக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியிருந்தார்கள்.
ஹைதராபாத்தில் சமூகசேவைகள் மூலமாக பல்வேறு நற்பணிகளையாற்றி மக்களிடையே பெரும்செல்வாக்கைப் பெற்ற கட்சியான அகில இந்திய மஜ்லிஸே இஹ்திஹாதுல் முஸ்லிமீன் அந்த பார்முலாவை பீகாரில் கையாளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த பரிச்சயமின்மையும் அது கடைப்பிடித்த குறுகிய இனவாத கொள்கையும் பீகார், உ.பி மற்றும் மகாராட்டிரம் மாநில தோ்தல் தோல்விகளுக்குக் காரணமானது.
பிஜேபி வேட்பாளா்களை நேரிடையாக எதிர்த்து நிற்க வேண்டிய மஜ்லிஸ் வேட்பாளா்கள் அப்படி செய்யவில்லை. மதசார்பற்ற கட்சிகளின் சார்பாக நின்ற சொந்த சமுதாய வேட்பாளா்களை எதிர்த்து நின்றார்கள். இதுவும் அதன் தோல்விக்குக் காரணமானது.
தொகாடியா, சாத்வி, அமித்ஷா போன்ற தலைவா்களை அந்த இனம் சார்ந்த சமுதாய மக்கள் புறக்கணிக்கும்போது, முஸ்லிம்கள் மட்டும் அதேசுவாபமுள்ள தங்கள் சமுதாய தலைவா்களை தோ்ந்தெடுக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமே இல்லை. ஏனென்றால், தங்கள் தலைவா்கள் போல முஸ்லிம்கள் எப்போதும் இரண்டு முகம் காட்டுபவா்கள் அல்ல.
Wednesday, November 4, 2015
அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 10: அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி!
நம் மீது யாராவது களங்கம் கற்பித்தால்... கோபம் வரும்! நம் தாய்-தந்தையர் மீது களங்கம் கற்பித்தால்.. வானம்-பூமிக்கும் துள்ளிப் பாய்வோம்! அதுவே நமது வாழ்க்கைத் துணைவியார் மீது களங்கம் கற்பித்தால்.. வாழ்வின் இக்கட்டான தருணமிது! இத்தகைய ஒரு சம்பவத்தை நபிகளார் எப்படி எதிர்கொண்டார்கள்?
அப்துல்லாஹ் பின் உபை!
நயவஞ்சகத்துக்கும், குழப்பச் செயல்களுக்கும், தீய பண்புகளுக்கும் முழு வாழ்க்கையையே வீணாக்கியவன்! கிடைக்கும் எந்த வாய்ப்பையும், நழுவவிடாமல்.. அதை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டுப் பயன்படுத்தத் தயங்காதவன் இவன்!
நபிகளாரின் அன்புத் துணைவியாரும், முஸ்லிம்களின் தாயாகவும் போற்றப்படும் அன்னை ஆயிஷா நாச்சியாரின் கற்பையே களங்கப்படுத்திப் பேசவும் துணிந்தவன்தான் அப்துல்லாஹ் பின் உபை!
இந்த வதந்தியால் இஸ்லாமிய கூட்டமைப்பின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் நடடிவடிக்கைகளில் ஈடுபட்டவன். நபிகளாருக்கும் அவர்களது அருமைத் தோழர்களுக்கும் உள்ளத்து அமைதி இழப்புக்குக் காரணமானவன். கடைசியில் இது சம்பந்தமாக இறைவன் திருக்குர்ஆனில்,
"இந்த அவதூற்றைப் புனைந்து கொண்டு வந்தவர்கள் உங்களில் ஒரு கும்பல்தான்! இந்த நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள்! மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது. அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ, அந்த அளவுக்கு பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது!" (24:11)
- இந்த திருவசனத்தை இறக்கி உண்மையை உணர்த்த வேண்டியதாயிற்று.
விபரீத நிகழ்ச்சிக்கும், வதந்தி பரப்புதலுக்கும் காரணமானவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனால், மூலக்கர்த்தாவான அப்துல்லாஹ் பின் உபையோ எந்தத் தண்டனைக்கும் ஆளாகவில்லை. அந்த நிலையிலும் அவன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. தன் விஷமச் செயல்களிலேயே குறியாக இருந்தான்.
பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இறையருளால்... முஸ்லிம்கள் மகத்தான வெற்றியை ஈட்டினார்கள். இஸ்லாமியச் சமூகம் உருவானது.
இந்த மாற்றங்களின் மன அழுத்தங்களால்.. அப்துல்லாஹ் பின் உபை நோயுற்றான். கடைசியில், இறந்தும் போனான்.
அவனுடைய மகன்கள் நபிகளாரிடம் சென்று தங்கள் தந்தையின் செயல்களை மன்னிக்க மன்றாடினார்கள்.
நபிகளாரும் அப்துல்லாஹ் பின் உபையை மன்னித்தார்கள். தந்தையின் உடலைப் போர்த்த நபிகளாரின் மேலாடையைக் (போர்வையை) கேட்டார்கள். நபிகளாரும் அதைக் கொடுத்தார்கள். தந்தையின் மரணத் தொழுகையை (ஜனாஸா தொழுகை) நடத்த வேண்டினார்கள். தந்தைக்காக பிரார்த்திக்கும்படி கேட்டார்கள். நபிகளார் இதையும் மறுக்கவில்லை.
தங்களின் கண்ணியத்தை இழிவுப்படுத்த முனைந்த அப்துல்லாஹ் பின் உபையின் மரணத் தொழுகையை நபிகளார் முன் நின்று நடத்தினார்கள்.
தீயவர்களை இறைவன் மன்னிக்காத நிலையிலும் நபிகளாரின் மன்னிக்கும் பண்பு வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மாபெரும் வெற்றிக்கு வழிகோலியது.
- இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.
''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:
1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை.. : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... :http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை.. : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... :http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
குழந்தை இலக்கியம் - சிறுவர் கதை: 'மன்னித்தலே மகத்தான குணம்!'
“போச்சு..! போச்சு..! என் டிராயிங் நோட் போச்சு..! டேய் அப்பு, சனியனே! ஏண்டா என் நோட்டை எடுத்தே?”
நான் கஷ்டப்பட்டு வரைந்து கலர் பெயிண்ட் செய்திருந்த ரோஜாப் பூவைக் கிழித்து விளையாடிக் கொண்டிருந்தால்.. கோபம் வராத பின்னே?
அடிதாளாமல் அப்பு, “அண்ணே! அண்ணே! இனி எடுக்க மாட்டேன். மன்னிச்சுடுண்ணே! அடிக்காதே வலிக்குது. வலிக்குது. மன்னிச்சுடுண்ணே!” அழ ஆரம்பித்தான். அதற்குள் அம்மா ஓடிவந்து என் பிடியிலிருந்து அவனை மீட்டுச் சென்றாள்.
இரவு. அப்புவுக்கு ஜீரம். கணகணவென்று உடம்பு கொதித்தது. படுக்கையில் படுத்திருந்தவன், “மன்னிச்சிடு.. மன்னிச்சிடு அடிக்காதேண்ணே!” – என்று புலம்பியவாறு இருந்தான்.
அப்பாவும் வந்துவிட்டார். நடந்ததைத் தெரிந்து கொண்டார். “ம்.. அது ஒரு காலம்! எதிரிகளையும் மன்னித்துவிட்ட நல்லவர் வாழ்ந்த காலம். இப்போது சொந்தத் தம்பி என்றுகூட பார்க்காமல், அதுவும் நாலு வயது குழந்தை என்றுகூட பார்க்காமல்… அவன் செய்த தவறையும் மன்னிக்க முடியாத இரும்பு மனம் கொண்ட மனிதர்கள் வாழும் காலம்!”-என்று வருத்தப்பட்டவாறு ஜீர மாத்திரைகளை ஊட்டிவிட்டார்.
அப்புவின் நிலைமையைக் கண்டதும் என் கோபமெல்லாம் போய்விட்டது. தம்பிக்கு ஏதும் ஆகக்கூடாதென்று கவலை சூழ்ந்துகொண்டது.
இரவு உணவு முடிந்தது.
அப்பா அப்புவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். அவனது தலையை லேசாக வருடிவிட்டார்.
நானும் அப்பாவின் அருகே அமர்ந்தேன்.
அம்மாவும் வந்துவிட்டார்.
அப்பா, “இது உண்மையில், நடந்த ஒரு சம்பவம்!” – என்றவாறு சொல்லலானார்:
“ஒருமுறை, ஒருவன் ஒரு இளைஞனைக் கொலை செய்துவிட்டான். அதை ஒருவர் பார்த்துவிட்டார். கொலைக்காரனை விரட்டினார். பயந்துபோன அவனோ ஓடிப் போய் ஒரு ரொட்டிக் கடையில் புகுந்து கொண்டான். அதன் உரிமையாளராக இருந்த முதியவரிடம், “அய்யா! பெரியவரே! என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் கொல்ல ஒருவன் விரட்டி வருகிறான். தயவு செய்து காப்பாற்றுங்கள்!” – என வேண்டினான்.
மனம் இளகிய முதியவர் அவனுக்கு அடைக்கலம் தந்தார். கடையில் பதுங்கிக் கொள்ள இடம் தந்தார். விரட்டி வந்தவர் முதியவரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் கொல்லப்பட்டது அவருடைய அருமை மகன்! நடந்ததை சொல்லிவிட்டு, “அய்யா! உங்கள் மகனைக் கொலை செய்த படுபாதகன் இங்குதான் வந்தான். எங்கே அவன்?” – என்றார் கோபமாக.
‘மகன் கொலை செய்யப்பட்டான்!’ என்ற செய்தியைக் கேட்டதும் பெற்ற தந்தையின் மனம் பதறியது. துக்கத்தில் இதயம் துவண்டது. கண்களில் கண்ணீர் பீறிட்டது. அழுதுகொண்டே அவர், தேடி வந்தவனிடம், “தம்பி! நீ சொன்ன ஆள் இங்குதான் என் பாதுகாப்பில் இருக்கின்றான். நான் அவனுக்கு புகலிடம் தந்துள்ளேன். அவன் என் மகனைக் கொன்றவனாக இருந்தாலும் சரி, என் வாக்கை கொஞ்சமும் மீற நான் விரும்பவில்லை. நான் அவனை மன்னித்துவிட்டேன். தயவு செய்து நீ போய்விடு!” – என்று சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்.
பிறகு உள்ளே சென்றவர், பதுங்கியிருந்தவனைப் பத்திரமாய் வெளியே அழைத்து வந்தார். அவன் பயணம் செய்ய ஒரு குதிரையைத் தந்தார். அவனிடம், “மகனே! நான் உனக்கு வாக்களித்ததைப் போல் காப்பாற்றி விட்டேன். இங்கிருந்து உடனே புறப்படு! இதற்கு மேல் நான் உனக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது!” – என்றார் துயரத்துடன்.
கொலைக்காரன் சென்றதும், முதியவர் அழுது கொண்டே தன் மகனின் உடலைக் காணச் சென்றார்.
எவ்வளவு பெருந்தன்மையான மனம் அவருடையது! எவ்வளவு பொறுமைசாலி அவர்! பார்த்தாயா?” – என்று அம்மாவிடம் சொன்ன அப்பா தொடர்ந்து, “ம்… அது தர்மங்கள் வாழ்ந்த காலம்!”-என்று முடித்தார் என்னைப் பார்த்தவாறு.
குற்ற உணர்ச்சியால் நான் தலை குனிந்து கொண்டேன்.
‘மன்னிக்கும் பண்பு மகத்தானது!’ – என்று புரிந்துகொண்டேன்.
என் கண்களில் கண்ணீர் பெருகியது.
(தினமணி கதிரில் பிரசுரமான எனது சிறுவர் கதை)
Friday, October 30, 2015
லென்ஸ் கண்ணாலே - 010, பூனையின் கண் பாருங்கள்..!
சென்ற பாடத்தில் ஒளிப்படங்களைத் தீர்மானிக்கும் 7 அம்சங்களைக் கண்டோம். இதை கவனத்தில் வைத்துக் கொண்டால் காமிராவின் அத்தனை இயக்கங்களையும் எளிதாக கையாண்டு அற்புதமான படங்களை எடுக்க முடியும். இறைவன் நாடினால், உலகப் புகழ் பெற்ற ‘போட்டோ கிராபராக’ மாற முடியும் என்றும் சொன்னேன்.
ஒரு நினைவுக்காக…
ஒளிப்படங்களை இந்த 7 அம்சங்கள்தான் தீர்மானிக்கின்றன.
1. வெளிச்சம் அல்லது ஒளி (LIGHT)
2. லென்ஸ் (LENS)
3. அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு.
4. நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம்.
5. ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) அதாவது சென்ஸார் திரை தொடு உணர்வின் அளவு.
6. படம் பிடிப்பதற்கான தொகுப்பு (COMPOSITION - Placement or Arrangement of Visual Elements)
7. ஈர்க்கப்படுதல் (INSPIRATION).
மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஏழு அம்சங்களில் அபெர்சர் (APERTURE), நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) மற்றும் ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) இவற்றை ஒவ்வொன்றாக இனி பார்க்கலாம்.
இதில் முதலில், அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு. பெரிய வட்டம் அல்லது சிறிய வட்டமாக மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் யாராவது செல்லப் பிராணியாக பூனையை வளர்ப்பவர்களாக இருந்தால் இனி கவனமாக அதை கண்காணியுங்கள். இரவு நேரங்களில் அதன் கண்களை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.
இரவில், பூனையின் கருவிழிகள் இருட்டு, வெளிச்சம் இவற்றுக்கு ஏற்றாற் போல, சுருங்கி விரிகின்றன. இதைதான் நான் பெரிய வட்டம். சிறிய வட்டம் என்று மேலே குறிப்பிட்டிருந்தேன். இது ‘அபெர்சர்’க்கு (APERTURE) சரியான உதாரணமாகும்.
அபெர்சர் (APERTURE) என்பது சென்ஸார் உணர்வு பலகையில் அதாவது தொடு திரையில், லென்ஸ் வழியே எவ்வளவு வெளிச்சம் பாய வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒளி அளவீட்டின் விட்ட அளவாகும்.
எடுக்கப்போகும் படத்தின் தன்மையை, படம் கருப்பாக (Darkness) வரவேண்டுமா, வெளுப்பாக (Lightness) வரவேண்டுமா? என்று இது தீர்மானிக்கும் அளவீடாகும்.
அபெர்சர் (APERTURE), ஆங்கில ‘எஃப்’ எழுத்தில் (F) குறியீடுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது ஆங்கிலத்தில் எஃப் ஸ்டாப்ஸ் (F Stops) என்றும் அழைக்கப்படுகிறது.
உதாரணமாக, F1.4, F2, F2.8, F4, F5.6, F8, F16, F22
F1.4 என்பது லென்ஸ்ஸில் அதிகரிக்கப்படும் பெரிய அளவு விட்டத்தின் அளவு. பெரிய வட்டம். அதிக அளவு ஒளி பாயும்.
F22 என்பது லென்ஸ்ஸில் குறைக்கப்படும் சிறிய அளவு விட்டத்தின் அளவு. மிகச் சிறிய வட்டம். குறைந்தளவு ஒளி பாயும்.
குறைந்தளவு எஃப் அளவீட்டு எண் என்பது லென்ஸ்ஸின் விட்டத்தை அதிகப்படுத்தும். பூனையின் விழித்திரை இருட்டில் விரிந்து பெரிதாவது போல.
அதிகளவு எஃப் அளவீட்டு எண் என்பது லென்ஸ்ஸின் விட்டத்தை குறைத்துவிடும். பூனையின் விழித்திரை பகலில் சுருங்கிவிடுவதைப் போல!
ஒளிப்படமெடுப்பவர் மத்தியில், ‘டெப்த் ஆஃப் பீல்ட்’ – Depth of Field (DOF) என்றொரு வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படும். இது நாம் போகஸ் செய்யும் படத்தின் ஆழத்தை அல்லது வீச்சை (Depth Of Focus) குறிக்கும் சொல்லாகும். அதனால், இதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அதிக அபெர்சர் (Widest APERTURE) (அதாவது F5.6) காட்சிப்படுத்தவிருக்கும் பொருளின் பின்னணியை மங்கலாக்கிவிடும். குறிப்பிட்ட காட்சிகள், நபர்கள் ஆகியவற்றை படம் எடுக்கும்போது இந்த முறையை கையாளலாம்.
சிறிய அபெர்சர் (APERTURE) (அதாவது F16) பின்னணி உட்பட காட்சிப்படுத்தும். இயற்கைக் காட்சிகள் மற்றும் பின்னணி உட்பட துல்லியமாக பதிவாக வேண்டும் என்று நினைக்கும்போது இதை பயன்படுத்தலாம்.
சிறிய அபெர்சர் எண் குறியீடுகள் என்பவை அதாவது F1.4, F2 போன்ற F Stops லென்ஸ்ஸின் விட்டத்தை பெரிதாக்கி (Wide APERTURE) அதிகளவு ஒளியை ஊடுருவச் செய்யும். இரவு போன்ற மங்கலான வெளிச்சத்தில் படமெடுக்க உதவுபவை.
பெரியளவு அபெர்சர் எண் குறியீடுகள் என்பவை அதாவது F8, F16, F22 போன்றவை. பளீர் வெளிச்சத்தில் படமெடுக்க உதவும். லென்ஸ்ஸின் விட்டத்தை சிறிதாக்கி குறைந்தளவு ஒளியை ஊடுரவச் செய்யும்.
கொஞ்சம் ஆழ்ந்து படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இது. விளக்கத்துக்காக படங்களை தந்திருக்கிறேன். கவனமாக பார்த்து செயல் ரீதியாக களத்தில் இறங்கி படமெடுங்கள்.
இறைவன் நாடினால் அடுத்தது, நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம் சம்பந்தமாக பார்ப்போம்..
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய தொடர்களை வாசிக்க:
001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html
002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html
003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html
004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html
005. படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html
006. என்கவுண்டர் செய்யாதீர்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/08/6.html
007. பிளாஷை பயன்படுத்துவது எப்படி? : http://ikhwanameer.blogspot.in/2015/08/7.html
008. புகைப்படக் கலையின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/08/8_31.html
009. காமிரா எப்படி இயங்குகிறது? : http://ikhwanameer.blogspot.in/2015/09/9.html
009. காமிரா எப்படி இயங்குகிறது? : http://ikhwanameer.blogspot.in/2015/09/9.html
Wednesday, October 28, 2015
அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 9: ஒரு ராஜாதி ராஜா .. பஞ்ச-பராரியாய்..!
>>>>>>>> வயிறார உண்ண உணவில்லை. ஆனாலும் ராஜா அவர்!
>>>>>>>> ஏழையாகவே மரணிக்க வித்யாசமான பிராத்தனை செய்தவர்!
>>>>>>>> வெறும் தலையணை, மண்பாத்திரங்கள் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்!
யார் அவர்? அவா்தான் நபிகள் நாயகம்!
நபிகள் நாயகம் தமது வாழ்வை மனித இனத்துக்கு ஒரு முன்மாதிரியாக விட்டுச் சென்றவர்கள். பசிப்பிணி, துன்பத்துயரங்கள் இவற்றை எல்லாம் சுயமாக அனுபவித்தவர்கள்.
துன்பத்துயரங்களை அனுபவித்தவர்களால்தான் மற்றவரின் பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மக்காவின் செல்வச் சீமாட்டி அன்பு துணைவியர் கதீஜா நாச்சியார். வணிகம் நிமித்தமாக மக்காவிலிருந்து அயலகம் செல்லும் ஒட்டகங்கள் ஒரு நூறு என்றால் இந்த அம்மையாரின் ஒட்டகங்கள் ஏறக்குறைய எழுபது! இன்றைய சொல் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால்.. ஒரு மில்லினர் அல்ல பெரும் பில்லினர்!
அத்தகைய செல்வச் சீமாட்டியின் துணைவரான நபி பெருமானார் தொடர்ந்து மூன்று நாட்கள்கூட வயிறார உண்டதில்லை.
ஏழை-எளியோரின் வறுமையைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது நோன்பு நோற்பார்கள். ஷாபான் மாதத்திலிருந்து ரமலான் மாதம் வரை நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.
பசிப்பிணியின் கொடுமையை உணர்ந்தவராய் ஏழைகளின் துன்பந்துயர் நீக்க இறைவனிடம் நெஞ்சுருக பிரார்த்திப்பார்கள்.
அரபு நாட்டின் முடிசூடாத மன்னராக இருந்த நபிகளாரின் பிராத்தனை என்னத் தெரியுமா?
"இறைவா, என்னை ஏழையாக இருக்கச் செய்வாயாக! ஏழையாகவே மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளுடனேயே உயிர்க்கொடுத்து எழுப்புவாயா!"
இந்த மனிதப் புனிதர்,
~~~~ குடும்பயியலில் இருந்தவாறே உலக வாழ்வில் பற்றற்றவராய்..
~~~~~ அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தவாறே சாமான்யராய்..
~~~~~ செல்வச் சீமாட்டியின் கணவராக இருந்தும் ஏழையாய்.. மிக மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். வாழ்வதற்கு அவசியமான குறைந்தளவு உணவே உண்டார்கள்.
நபிகளாருக்குப் பிடித்தமான உணவு என்னத் தெரியுமா?
பார்லியால் செய்யப்பட்ட ரொட்டி!
நபிகளார் வீட்டில் பல நாட்கள் அடுப்பே எரியாது. அத்தகைய நாட்களில் வெறும் பேரீச்சம் பழங்கள்தான் அவர்களது உணவாக இருந்தது. வயிற்றுப் பசியின் கொடுமையைத் தாளாமல் வயிற்றில் கற்களைக் கட்டிக் கொள்வார்கள். தமது பசியின் வேதனையை அடுத்தவர் அறியா வண்ணம் புன்னகைத்தவாறு இருப்பார்கள்.
ஒருமுறை.
தோழர், இம்ரான் பின் ஹஸீனை (இறையருள் பொழிவதாக!) அழைத்துக் கொண்டு தமது அருமை மகள் ஃபாத்திமாவின் இல்லத்துக்குச் சென்றார்கள்.
கதவைத் தட்டியதும், உள்ளே இருந்து ஃபாத்திமா அம்மையார் "இறைவனின் மீது ஆணையாக! என்னிடம் மாற்று உடைகூட இல்லாமல் இருக்கின்றேன்!" -என்றதும் நபிகளார் தமது தோளிலிருந்த துண்டை எடுத்து மகளிடம் தந்தார்கள். அதைத் தரித்துவரும்படி பணித்தார்கள்.
வீட்டில் உண்ண உணவு ஏதுமில்லை. அருமை மகள் பசியால் வாடுவதை அறிந்ததும் நபிகளாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்த வறுமை நிலையைப் போக்க நபிகளார் இறைவனிடம் பிரார்த்தித்திருக்க முடியும். ஆனால், இம்மை வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவராய்.. நிலையான மறுமை வாழ்வைக் குறித்தே அதிக அக்கறைக் கொண்டிருந்தார்கள். தம்மைச் சுற்றி இருந்தோரிடமும் அதைத்தான் போதித்தார்கள்.
அந்த இறுக்கமான சூழலிலும் அன்பு மகளை அணைத்தவாறு, "மகளே, உன்னை சுவனத்துப் பெண்களின் அரசியாக்கி இறைவன் அருள்புரிவானாக!" என்று பிரார்த்தித்தவாறு நன்மாரயம் சொன்னார்கள்.
ஒரு நாட்டின் பேரரசராக திகழ்ந்தவரின் நிலைமையைப் பார்த்தீர்களா?
நபிகளார் தம்மிடம் இருந்த செல்வத்தை எல்லாம ஏழை-எளியோர் துயர் துடைக்க வாரி வாரி வழங்கினார்கள். அதேநேரத்தில் அவர்களது அன்பு மகள் ஃபாத்திமா (இறையருள் பொழிவதாக!) ஏழ்மையில் வாடினார்கள். தமது உணவுக்கான மாவை தாமே அரைத்துக் கொள்வார்கள். வீட்டுக்கான குடிநீரை தாமே சுமந்து வருவார்கள். ஒரு சராசரி மனிதர்கூட பணியாளரை வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இவை எல்லாம் நடந்தன. எத்தனை வித்யாசமான வரலாற்று நிகழ்வுகள் இவை!
வரலாற்றில் அரசர்களின் ... அதிபர்களின் ... பிரமுகர்களின் மனைவி-மக்கள், குடும்பத்தார் அனுபவித்த உல்லாச வாழ்க்கைக்கு நேர்மாறான வரலாறு இது!
அரபு நாட்டின் மாமன்னராக விளங்கியவர் நபிகள் நாயகம். அவரின் அன்பு மகளார், இதயத்துண்டு திருமணத்தின்போது, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் சென்ற சீர்-செனத்திகள் என்ன தெரியுமா?
>>>>> ஒரு பாய்!
>>>>> ஒரு தோலாலான தலையணை!
>>>>> இரண்டு மண் பாத்திரங்கள்,ஒரு ஜாடி மற்றும் மாவரைக்கும் ஒரு கல் எந்திரம் ஆகியவை மட்டுமே!
இத்தகைய ஆளுமைப் பண்புக்குரியவரிடம் யார்தான் மயங்கமாட்டார்கள்?
---- >>>> இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:
அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
ஓர் இறை.. ஓர் நிறை.. : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
ஓர் இறை.. ஓர் நிறை.. : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
அடிமைத் தளையிலிருந்து விடுதலை : http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html























