NewsBlog

Friday, May 12, 2017

பல்கிஸ் பானு: துரத்தும் மனசாட்சியின் குரல்


பல்கிஸ் பானு தனது 3 வயது பெண் குழந்தையான சாலிஹாவை இறுக்கி அணைத்துக்கொண்டார். கும்பலில் ஒருவன், முதலில் அவரிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி, அதன் தலையை தரையில் அடித்துக் கொன்றான். மூன்று பேர் நெருங்கிவந்து, அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்தார்கள். அவர்களை பல்கிஸ் பானுவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை பானு சிறுவயதில் அண்ணன் என்றும் மாமா என்றும் அவர் அன்போடு அழைத்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கிறேன் என்ற பல்கிஸ் பானுவின் கதறலுக்கு அவர்கள் காது கொடுக்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவர் மாறி ஒருவராக அவரை வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் குழந்தையை ஈன்ற தாயும், அவரது பிஞ்சுக் குழந்தையும்கூட கொல்லப்பட்டார்கள். - செல்வ புவியரசன் 

''''''''''''''''''''''''''''''''''''

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்றொரு சொல்வழக்கு உண்டு. ஆனால், பில்கிஸ் பானு வழக்கில் மறுக்கப்பட்ட நீதி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு காலதாமதமாக வழங்கப்பட்டிருக்கிறது. 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரங்களின்போது, கூட்டாகச் சேர்ந்து வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்ததற்காகவும் 11 குற்றவாளிகளுக்கு 2008-ல் மும்பை சிறப்பு நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கிறது மும்பை உயர்நீதிமன்றம்.

குற்றவாளிகள் 11 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமின்றி, அவர்களைப் பாதுகாக்க முயற்சித்த ஐந்து காவலர்களும் இரண்டு மருத்துவர்களும்கூட இப்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். மும்பை சிறப்பு நீதிமன்றம் மருத்துவர்களையும், பிணங்களை எரித்து தடயங்களை அழித்த காவலர்களையும் தண்டிக்க மறுத்துவிட்டது. வழக்கு பதிய மறுத்த தலைமைக் காவலருக்கு மட்டுமே அது தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பணியில் இருந்த காவலர்களும் மருத்துவர்களும் தனது பணியைச் செய்ய மறுத்து, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை அளித்திருக்கும் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முன்னோடியான தீர்ப்புகளில் ஒன்றாகும்.

நீதியின் நெடும்பயணம்

குஜராத் கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அஹமதாபாத் நகரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராதிக்பூர் கிராமத்தில் ஒரு மதவெறிக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. முஸ்லிம் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது. தீ வைக்கப்பட்ட வீடுகளில் பில்கிஸ் பானுவின் வீடும் ஒன்று. அவரது குடும்பத்தினர் வீட்டுக்குப் பின்னாலிருந்த வயல்களுக்குள் ஓடினர்.

பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிக்கூடம், மசூதி என்று அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக பாதுகாப்பு தேடி அலைந்தனர். மசூதியில் அவர்கள் தங்கியிருந்தபோது அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய வரவும் வந்தது. பல்கிஸின் சகோதரி ஒரு குழந்தையைப் பிரசவித்தார். மசூதியில் தங்குவதும் பாதுகாப்பானதாக இல்லை.

அங்கிருந்து அக்குடும்பம் பாதுகாப்பான இடத்தைத் தேடி பயணத்தைத் தொடர்ந்தது. முக்கியமான சாலைகளைத் தவிர்த்துக் காட்டுப் பகுதிகளின் வழியாகவே அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களை கத்திகளோடும் வெட்டரிவாள்களோடும் ஒரு கும்பல் இடைமறித்தது. ‘இதோ முஸ்லிம்கள்… கொல்லுங்கள் அவர்களை… வெட்டுங்கள் அவர்களை’ என்று கூச்சலிட்டது.

குரூரத்தின் உச்சம்

பில்கிஸ் பானு தனது 3 வயது பெண் குழந்தையான சாலிஹாவை இறுக்கி அணைத்துக்கொண்டார். கும்பலில் ஒருவன், முதலில் அவரிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி, அதன் தலையை தரையில் அடித்துக் கொன்றான். மூன்று பேர் நெருங்கிவந்து, அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்தார்கள். அவர்களை பல்கிஸ் பானுவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை பானு சிறுவயதில் அண்ணன் என்றும் மாமா என்றும் அவர் அன்போடு அழைத்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கிறேன் என்ற பில்கிஸ் பானுவின் கதறலுக்கு அவர்கள் காது கொடுக்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவர் மாறி ஒருவராக அவரை வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் குழந்தையை ஈன்ற தாயும், அவரது பிஞ்சுக் குழந்தையும்கூட கொல்லப்பட்டார்கள்.

பல்கிஸ் பானு எட்டு வல்லுறவுகளுக்கும், பதினான்கு கொலைகளுக்கும் ஒற்றைச் சாட்சி. குற்றவாளிகள் அத்தனை பேரின் பெயர்களும் விவரங்களும் அவருக்குத் தெரியும். நடந்ததை எல்லாம் விவரமாகக் காவல் நிலையத்தில் சொன்னார். ஆனால் தலைமைக் காவலர் சோமாபாய் கோரி அதை வழக்காகப் பதிவு செய்துகொள்ளவில்லை. பல்கிஸ் பானுவை மீட்பு முகாமிற்கு அனுப்பிவைத்தார்.

தடயத்தை அழித்த காவல் துறை

இரண்டு நாட்கள் கழித்து உள்ளூர் புகைப்படச் செய்தியாளர்கள் சிலர் படுகொலைக்கு ஆளான குடும்பத்தின் உடல்களைக் கண்டுபிடித்தார்கள். அதன் பிறகே அச்செய்தி வெளியுலகத்தை எட்டியது. காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அழுகிக் கிடந்த பிணங்களிலிருந்து தனது மூன்று வயது குழந்தையையும் குடும்பத்தினரையும் அடையாளம் காட்டினார் பல்கிஸ். வல்லுறவு நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே அவர் மருத்துவச் சோதனை செய்யப்பட்டார். கொல்லப்பட்டவர்களுக்கும் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு பிணக்கூறாய்வு செய்யப்படவில்லை.

சிபிஐ இந்த வழக்கில் மறுவிசாரணை செய்வதற்காக 2004-ல் பிணங்களை மீண்டும் தோண்டியெடுத்தபோது, மண்டை ஓடுகள்கூட கிடைக்கவில்லை. அப்போதுதான் பிணங்கள் உடனே மக்க வேண்டும் என்பதற்காக உப்பைத் தூவியது தெரியவந்தது. இவ்வழக்கின் ஆரம்பத்திலிருந்தே தடயங்களை மறைப்பதிலும் குற்றவாளிகளுக்கு உதவுவதிலும் காவல் துறை ஈடுபட்டு வந்திருப்பது வெட்டவெளிச்சமானது.

பாலியல் வல்லுறவு நடந்து 15 நாட்களுக்குப் பிறகுதான், பல்கிஸ் பானுவால் மீட்பு முகாமிலிருந்த காவல் துறையிடம் சொல்லி வழக்கைப் பதிய முடிந்தது. காவல் துறை அவரிடம் வெற்றுத்தாள்களில் கைரேகையைப் பதிவு செய்துகொண்டது. அவரை வல்லுறவுக்கு ஆளாக்கியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துவிட்டது. விளைவாக, 2003 மார்ச் 25 தேதியன்று போதிய சாட்சியங்கள் இல்லையென்று குற்றவியல் நடுவர் இந்த வழக்கை முடித்துவைத்தார்.

உருக்கும் வார்த்தைகள்

தேசிய மனித உரிமை ஆணையத்தின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தை நாடினார் பல்கிஸ் பானு. உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை குஜராத் அரசு விசாரிப்பதற்குத் தடை விதித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இவ்வழக்கை சிபிஐ விசாரணை செய்யவும் உத்தரவிட்டது. மேலும், குற்றங்கள் நடந்தபோது முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி, அவரது ஆட்சியில் நேர்மையான நீதி விசாரணைக்கு வாய்ப்பில்லை என்று வழக்கு விசாரணையை குஜராத்தில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் பல்கிஸ் பானுவின் வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது. இவ்வழக்கில் அவருக்கு ஆதரவாக இருந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கும்கூட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் உடன்பாடில்லை. பல்கிஸ் பானுவும்கூட அதே கருத்தைத்தான் சமீபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இத்தனை வலிகளுக்குப் பிறகு அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகள் நம் மனதைப் பிசைகின்றன. மனசாட்சியை அவை துரத்துகின்றன.

“நியாயம் கிடைக்க வேண்டும் என்றே போராடினேன், பழிதீர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமைகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் என் பெயரைச் சொல்லி யாரும் சாவதை நான் விரும்பவில்லை. என் மகள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறேன்!”

(நன்றி - தி இந்து-தமிழ் (11.05.2017)
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive