அன்புள்ள தம்பி சீமானுக்கு,
”தங்கள் மீது, இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவ” பிரார்த்திக்கின்றேன்.
இது ரமளான் மாதம். நாங்கள் நோன்பு நோற்பதிலும், இறைவனின் சமீபத்துக்காக இறை வணக்கங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரம். தூங்குவதற்குகூட இந்த மாதத்தில் எங்களுக்கு சரியாக நேரம் கிடைப்பதில்லை. இவற்றை மாமன், மச்சான் உறவு முறையினரான நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே எண்ணுகின்றேன். இப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் இந்த மடலை எழுதுகிறேன் என்பது இதன் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும்.
சீமான்,
உங்களின் பேச்சுக்களை நேரிடையாக கேட்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்காவிட்டாலும் உங்கள் காணொளிகளை விரும்பி கேட்போரில் நானும் ஒருவன். அந்த அப்பத்தா, அண்ணன், தங்கை, என்று ஒரு மலர் மாலையாய் உறவு முறைகளோடு உறவாடி, எதிர்த்து பேசப்படும் நபரையும் மிகவும் மரியாதையுடன் விளிக்கும் அந்த காணொளிகளை அதுவும் என் குடும்பத்தாரோடு விரும்பி கேட்பேன்.
தமிழன் என்பதற்காக தாங்கள் தரும் விளக்கம் அழகானது.
சிறுபான்மையினர் என்றழைக்கப்படும் முஸ்லிம்கள் உண்மையிலேயே சிறுபான்மை இனத்தவர் அல்ல. அவர்கள் பெரும்பான்மை இனத்து இந்த மண்ணின் மைந்தர்கள். தீண்டாமை ஒடுக்குமுறையிலிருந்து சமத்துவ சமயம் தழுவியவர்கள், தமிழ் இனத்தவர்கள் என்று கொடிதாங்கியாய் உறவுமுறையோடு தாங்கள் மேடையில் பேசுவது அரசியல் அரங்கில் மிகவும் வித்யாசமானது. வட்டார மொழியில், உலக அறிஞர்களின் உதாரணத்தோடு ஆற்றும் உரை லேசானதல்ல.
இலங்கையில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு மேடையில் வருத்தம் தெரிவித்த நேர்மையும் பாராட்டத்தக்கது. கன்னியாக்குமரியிலிருந்து காஷ்மீர்வரை நீளும் தங்கள் பேச்சு அழகிய சொல்லோவியம்தான்!
தம்பி சீமான் தமிழக அரசியலையும் தாண்டி இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இத்தகைய நபர்கள் நமது நாட்டில் நிறைய பேர் தேவை என்றுகூட நான் சிலாகிப்பதுண்டு.
எனது ரசிப்புத்தன்மையும், சிலாகிப்பும் ஒருவேளை எனது தொகுதியில் உங்கள் வேட்பாளர்கள் நிற்பின் அவர்களுக்கு வாக்களிப்பதுமான எனது உடன்பாடுகள் நாம் தமிழர் கட்சியின் தம்பி சீமானுக்கு ஆதரவாக இருப்பினும், தங்கள் தமிழ் தேசியத்தின் மீது முரண்பாடுகள் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை தெளிவுபடுத்திட விரும்புகின்றேன்.
சமத்துவம் பெற இஸ்லாத்தைத் தழுவிய நாங்கள் அதன் பரந்த வெளிக்குள் சிக்கிக் கொண்டதும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொன்மொழிக்கேற்பவே உலகளாவிய தத்துவத்தைப் பின்பற்றி உலகை ஒரு குடும்பமாய் பாவிப்பதன் தாக்கமாகவும் இது இருக்கலாம்.
தனது இனத்தை நேசிப்பதும், அந்த இனத்துக்காக உழைப்பதும், சொந்த இன மானத்துக்காக ரோஷம் கொள்வதும் இயல்பானதுதான். இவை எல்லாம் அனுமதிக்கப்பட்டவைதான். ஆனால், தன் இனத்துக்கான கண்மூடித்தனமான வெறிக்கொள்வதை நபிகளார், கிணற்றில் விழ இருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்து இழுப்பதற்கு ஒப்பாகும் என்று அழகிய உதாரணத்துடன் விளக்குகிறார்கள். ஒட்டகத்தோடு, அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருப்போரும் கிணற்றில் விழுவதை தவிர்க்கவே இயலாது என்பதே இதன் பொருள்.
சீமான், தங்கள் கொள்கை, கோட்பாடுகள் ஏற்கனவே தீர்மானமானவை என்பதை நான் அறிவேன். பெரும் வலியிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் இழப்பதற்கு இனி ஒன்றுமேயில்லை என்ற வெறுமையிலிருந்தும் உருவானவை என்பதும் தெரியும். இதிலிருந்து மீண்டு எழ வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு தலைவன் என்ற முறையில் தங்களுக்கு இருக்கிறது என்பதை தாங்களும் அறிவீர்கள்.
நான் முதல்வரானால் தமிழகத்தை எப்படி முன்னெடுத்து செல்வேன் என்று தாங்கள் மேடைகளில் பெருத்த நம்பிக்கையோடு துல்லியமான திட்டங்களை அறிவிப்பது பாராட்ட வேண்டியவைதான்! அதேநேரத்தில் சீமான் என்றொரு தனி மனிதனால் மட்டுமே அவை செயல்படுத்தப்படுபவை என்று எளிதாக நினைப்பது குழந்தைத்தமானதாகவே இருக்கிறது. அரசு எந்திரத்தை நிர்வகிப்பவர்களின் ஒட்டுமொத்த சிந்தனையையும் ஒருசேர திருப்பி ஒத்துழைப்பு பெறுவதற்கு சீமானின் கையில் எந்த மந்திரக்கோலும் இல்லை. அதிலும் ஆதிக்க வெறியர்களின் கையில் அரசு எந்திரத்தின் பெரும் பகுதி சிக்கி உள்ள நிலையில் திடுப்பென்று சிங்கபூர் மாற்றங்களை உருவாக்கிடுவது எளிதானதல்ல.
அதேபோல, ஜப்பானிய இளைஞர் அளவு சுயநலமற்ற இளைஞர்களும் நம்மிடம் இல்லை. நமது இளைஞர்களை மேம்படுத்தி அவர்களை ஒழுக்க மாண்புகளில் தலைச்சிறந்தவர்களாக்க இதுவரை எத்தகைய பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.
அய்யா மோடி சர்க்காரின் ஒளிமயமான இந்தியா என்ற சொல் ஜாலமாக தங்கள் மேடை பேச்சுகள் ஆகிவிடக் கூடாதே என்ற கவலையில்தான் இதை சொல்கிறேன்.
தங்கள் பேச்சுகளில் நெருப்பு கங்குகளாய் வெளிப்படும் கருத்துக்களை ஆட்சி எந்திரத்தார் வெகு நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வெகு சீக்கிரத்தில் அதிகார எந்திரம் உங்கள் மீது பாயும். நீங்கள் முற்றிலும் ஒடுக்கப்படுவீர்கள் என்ற உண்மையான கவலையினால்தான் இந்த மடல் இந்த அர்த்த ராத்திரியில், நோன்பு காலத்தில் எழுதப்படுகிறது.
பால்தாக்கரேக்களும், உமாபாரதிகளும், யோகி ஆதித்யநாத்களும், சாத்வி ரிதம்பராக்களும் நாமும் ஒன்றல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ஜனநாயக அமைப்பின் இரு வேறு கூறுகளாய் நாம் பிரிக்கப்பட்டுள்ளதுதான் நிஜம். இரு வேறு பார்வைகள். இரு வேறு நீதி, நியமங்கள் என்று நமது அமைப்பு அடுக்குமுறைகளாய் உள்ளது.
செக்கிழுத்த செம்மல்களாய், கப்பலோட்டிய தமிழன்களாய், வீரப்பாண்டிய கட்டபொம்மன்களாய் இந்திய அமைப்பில் வெள்ளையனின் சாயல்களில் நமது சட்டங்கள் நம்மீதே பாயும் காலமும் உண்டு. உரிமைகளைக் கேட்டதற்கு காலம் முழுக்க சிறையிலிருந்த காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாஹ்வை தாங்களும் வாசித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அமைதி வழியில் போராடிய இரோம் ஷர்மிளாவின் இளமை ஒருவிதமான சிறைக்கம்பிகளுக்குள் கழிந்து போன சமகால வரலாறும் தாங்கள் அறிவீர்கள்.
அதனால் தம்பி சீமானுக்கு இந்த அண்ணனின் அறிவுரை என்னவென்றால், பாத்திகளில் நாற்று வளர்த்தெடுங்கள். அவற்றை பக்குவமாய் எடுத்து பண்படுத்தப்பட்ட வயல்களில் நடுங்கள். நீர்ப்பாய்ச்சி உரமிட்டு, களையெடுத்து மறக்காமல் வேலியிட்டு அறுவடைக்கான காலம்வரை பொறுத்திருங்கள். அதற்கான அறிவு ரீதியான வியூகம் அமையுங்கள்.
தன்னலமற்ற இளைஞர் பட்டாளமும், ஒழுக்கத்தில் தலைச்சிறந்த அவர்களின் உன்னத நடவடிக்கைகளுமே நமது சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும். அதிகாரம் மிகவும் முக்கியமானதுதான். அந்த அதிகாரம் கையாலாகாத அதிகாரமாகிவிடக்கூடாது என்பது அதைவிட முக்கியம்.
சுருக்கமாக சில வரிகளில் சொல்லப்பட்ட முக்கியமான இந்த செய்தியை தாங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எனது இனத்தில் தோன்றிய நல்லதொரு அரசியல் அறிஞரை நான் இழக்க விரும்பவில்லை என்ற கவலையின் வெளிப்பாடாகவே இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது அறிவுரைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் தாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே..!
சிந்தியுங்கள். செயல்படுங்கள். வெற்றிப் பெறுவீர்கள் என்ற வாழ்த்துக்களுடன் இந்த மடலை முடிக்கிறேன்.
என்றும் பிரியங்களுடன்,
உங்கள் அண்ணன்,
இக்வான் அமீர்
மூத்த இதழியலாளர்.
ஐயா வணக்கம்..
ReplyDeleteமிகவும் பொருப்புடன் நல்ல ஆசானாக தாங்கள் சொல்லிய அறிவுரை மிக அழகு உங்களை வாழ்த்த எமக்கு அகவை போறா... ஒரு சல்யூட்
அன்புடன்
கில்லர்ஜி
நன்றி சகோதரரே!
DeleteI SHARE YOUR LETTER TO SIMAN
ReplyDeleteமிகவும் நன்றி சகோதரரே..! ஏற்கனவே அவருக்கு அனுப்பப்பட்ட பதிவை படித்து அதற்கான சுருக்கமான பதிலை குரல் ஒலி மூலம் அனுப்பியும் உள்ளார் என்பது தங்களுக்கான தகவல்.
Deleteகண்மூடித்தனமாக என்று குறிப்பிட்டது எதனை என்று விளங்கப்படுத்தினால் நன்று
ReplyDelete///தங்கள் பேச்சுகளில் நெருப்பு கங்குகளாய் வெளிப்படும் கருத்துக்களை ஆட்சி எந்திரத்தார் வெகு நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வெகு சீக்கிரத்தில் அதிகார எந்திரம் உங்கள் மீது பாயும். நீங்கள் முற்றிலும் ஒடுக்கப்படுவீர்கள்///
ReplyDeleteநூறு சதவிகிதம் உண்மை
தங்களை எதிர்த்தவர்களை எப்படியாவது அழிக்க பார்ப்பார்கள் பார்ப்பனர்கள் இதுதான் வரலாறு. சிந்தியுங்கள். செயல்படுங்கள். வெற்றிப் பெறுவீர்கள்.
M.Syed
அழகான விதத்தில் அறிவுரை வழங்கி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி Vimal
Deleteஅருமையான மடல் சீமான் தம்பிகளுக்கும் தெளிவாக தெரிகிறது
ReplyDeleteநன்றி சங்கர்
Deleteஅருமை. சீமான் ஊடகங்களில் பேசும்போது அதிர்ந்து பேசாமல் நிறுத்தி நிதானமாக பேச வேண்டும். உங்களைப்போல் நானும் தம்பி சீமான் வளர வேண்டும் என்றே கவலையோடு காத்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி narayanan krishnan
Delete