NewsBlog

Wednesday, April 19, 2017

விண்ணுலகவாசிகளின் கனாக் காலமா மார்க்கம்?

தமிழ் தேசியம், திராவிடம், பெரியாரிஸம், சங்ககாலம், தமிழர் இலக்கியங்கள், தமிழர் பண்பாடு – வாழ்வியல், மண்ணுக்கான அரசியல் இவற்றைக் கடக்காமல் எந்த இஸ்லாமிய இயக்கமும், முஸ்லிம் கட்சிகளும் தமிழகத்தில் வேரூன்றவே முடியாது! மண்ணைத் தெரிந்து கொள்ளாமல் மக்களைப் புரிந்து கொள்வது எப்படி?

இன்று நிஜத்தில் நடப்பது என்ன?

• தன்னைப் பற்றி எதுவும் தெரியாமல்,
• தானும் இந்த மண்ணுக்கான ஒரு பூர்வீக இனம் என்று அறியாமல்,
•வாழ்வியல் தேட்டங்களில் பொதுவானவன் என்று அடிடையாளப்படுத்த முடியாமல்,
• ஒருவிதமான மனச்சிதைவுக்கு ஆளானதைப் போலவே

தன்னை சிறுபான்மை இனமாக சிறுமைப்படுத்திக் கொண்டு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

இதன் விளைவாக மூன்றாம் தர குடிமக்களாக தன்னைப் பாவித்துக் கொள்கிறார்கள்.

தாங்கள் பின்பற்றி வாழும் மார்க்கத்தின் தேட்டங்களை தானும், விளங்கிக் கொள்ளாமல், அடுத்தவர்க்கும் விளக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள் அல்லது தனித்தனியாக்கிக் கொண்டு குழம்புகிறார்கள்.

மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் தனது அன்றாட வாழ்வின் ஒரு சகஜமான வாழ்வியல் நடைமுறைகளாய் பாவிக்காமல், இதற்கு எதிரான சிந்தனைகளை எளிமையாக எதிர்க்கொள்ளும் மார்க்க அறிவில்லாமல்,

சதா சுமைச் சுமக்கும் சிந்துபாத் கிழவனைப் போல ஒரு பெரும் சுமையுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தின் பின்பற்றாளர் மனோநிலை இதுவென்றால், அவர்களை வழிநடத்தும் அண்மைக்கால தலைவர்களின் மனோ நிலையோ இன்னும் படுமோசமாகவே இருக்கிறது.

தமிழ் மண்ணுக்கு, தமிழ் பேச்சுக்கு, தமிழின் தொன்மைக்கு, கலை, இலக்கியங்களுக்கு கலாச்சாரத்துக்கு மார்க்கத்தை கொண்டு சேர்க்காமல்,

வாழும் மண்ணுக்கேற்ப மார்க்கம் சம்பந்தமான எளிய, தெளிவான வழிகாட்டுதல் காட்டாமல்,

செம்மறி ஆட்டு மந்தைகள் போலவே தொண்டர்கள் வழிநடத்தப்படுகிறார்கள்.

பிரச்னைகளை எதிர்கொள்ளும் தெளிவின்றி, அவற்றை தீர்க்கும் அறிவின்றி உணர்ச்சி பிழம்பானவர்களாய் மாயத் தோற்ற சித்தரிப்பில் சிக்க வைக்கப்படுகிறார்கள்.

எரிமலையாய் வெடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய நாட்டுச் சூழலில் தாடி, தொப்பிகளும், விரல் அசைவுகளும் அல்லது அவர்களது வாழ்வின் சில நடைமுறைகளுமே பிரதானப்படுத்தப் படுகின்றன என்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது!

பட்டப் பகலில், மக்கள் திரண்டிக்கும் சாலையில், திருப்பூரில் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியால் தாக்கப்பட்டது ஒரு எளிய பெண் அல்ல. தன் வீட்டின் நெருங்கிய அங்கம், உறவுமுறை கொண்டவள் என்னுணர்ந்திருந்தால் தமிழகத்தின் தெருக்கள் எல்லாம் இந்நேரம் கருப்பு அங்கிகளால் ஸ்தம்பித்துப் போயிருக்குமே..! அநாகரீகமாய், மூர்க்கமாய் நடந்துகொண்ட அந்தக் காவல்துறை அதிகாரி இந்நேரம் தனது சீறுடையை இழந்திருப்பார்.

சோறு போடுபவன் நிர்வாணமாய் தலைநகரில் ஒரு மாதத்துக்கும் மேலாக பரிதவிக்கிறான் என்றறிந்து வெறும் உச் கொட்டிக் கொண்டிராமல் தில்லி நகரம் தாடி, தொப்பி அங்கிகளால் திணறியிருக்கும்!

தானும், தன்னைச் சுற்றியிருக்கும் சமூகமும் உயிர்வாழ்வதற்கே தள்ளாடும் பெரும் சூழல் சுமையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வழிகாட்டும் மீகாமன்களோ திசைத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அவலநிலை எவ்வளவு துரதிஷ்டவசமானது!

இலக்கில்லாமல் மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் சாரதிகளை அகற்றிவிட்டு இலக்குகளை நோக்கிச் சீறிப்பாயும் ரதமோட்டிகளாய் பொதுவெளியில் இந்த சமூகம் அடையாளப்படுத்தப்படுவது எப்போது?
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive