NewsBlog

Monday, January 23, 2017

வெறும் எரிநட்சத்திரமல்ல நீங்கள்!

”இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை! அடிமைச் சங்கிலியைத் தவிர!” – என்னும் வாழ்வியல் நெருக்கடிகளில், தன்னெழுச்சியாய் சர்வாதிகார ஒடுக்குமுறைகளிலிருந்து குருதி மய தியாகங்களில் முகிழ்ந்த மலர்தான் ஜனநாயகம். பாசிஸ – சர்வாதிகார முதுகெலும்பை முறித்து மேலெழும் மக்கள் குரல்தான் அது!

நமது ஜனநாயக அமைப்பின் அடிப்படை நாதமாய் இருப்பதுதான் அரசியல் அதிகாரம். அதன் பிரதிநிதிகளே அரசியல் கட்சிகள். பல்வேறு சிந்தனைகள், கொள்கை-கோட்பாடுகள் என்று ஜனநாயகத்தின் பிறிதொரு வடிவமாய் வகுத்துக் கொண்ட அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் கருத்துக்களின் பிரதிபலிப்பான்கள்தான் அரசியல் கட்சிகள். மாற்று அரசியல் அதிகாரத்தால் தனித்து நிற்பவை.

இந்த அரசியல் கட்சிகள் வெறும் அதிகார மையங்களாகிப் போனதும், பணமீட்டும் அமைப்பாய் நமது ஜனநாயகத்தை நினைப்பதாலும் எந்த கொள்கை, கோட்பாடுகளுக்காக அரசியல் கட்சிகள் முளைத்தனவோ அவற்றை விட்டு விலகிப் போனதும்தான் நாட்டின் எல்லா பிரச்னைகளுக்கும காரணம்! தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல!

மையக்கருத்தைவிட்டு விலகியதோடு, தத்தமது நிறங்களை இழந்ததால்தான் இந்த அரசியல் கட்சியினரை அலங்காநல்லூரிலும், மெரீனா கடற்கரையிலும் இளைஞர்கள் விரட்டியடிக்கின்றனர். ஜல்லிக்கட்டு என்ற பெயரால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தன்னெழுச்சி என்ற பெயரில் திரண்டு நிற்கும் நபர்களால் விலக்கி வைக்கப்படுகின்றனர். இந்த அவல நிலையை அலசுவதல்ல இந்த பதிவின் நோக்கம். அதை பிறிதொரு பதிவில் தனியாக பார்க்கலாம்.

தன்னெழுச்சி என்ற பெயருடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்ற பதாகையைத் தாங்கி திரளும் இளைஞர்கள் அரசியல் அதிகாரத்திலிருந்து விலகி வழிதேடுவது என்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

ஒவ்வொரு கூட்டத்தின் பின்னும் ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை தவறாக வழி நடத்த திட்டமும் செயல்படுகிறது. கூடவே வன்முறையை எளிதில் தூண்டிவிட ஊடுருவலும் நடக்கிறது.

தமிழர் கலாச்சாரம், பண்பாட்டு வாழ்வியல் முறையை நிலைநிறுத்திக் கொள்வதற்கான களங்கள் எங்கேயோ இருக்கும் மைதானங்கள் அல்ல தேடிச் செல்ல! பல ஆயிரமாய் திரண்டிருக்கும் மக்கள் திரளும் அல்ல அவை. ஒவ்வொருவரின் வீடும் ஒரு அரசியல் அதிகார குவிப்பின் மையம்தான்!

குடும்பங்களிலிருந்து தெருக்களாய், பல தெருக்கள் இணைந்த நகர்களாய், பல நகர்களால் கட்டப்பட்ட ஊர்களாய் என்றுதான் இந்த அதிகாரம், ஊராட்சி மன்றங்களிலிருந்து, சட்டமன்றம், பாராளுமன்றம் என்று வளர்ந்து கைப்பற்றப்பட வேண்டியது.

தமிழ்நாட்டையும் தாண்டி டெல்லிவரையிலுமான மக்கள் கட்டமைப்பு கொண்டதே நமது ஜனநாயகம். இந்த ஜனநாய அமைப்பின் முதுகெலும்புகளாய் மாறி நல்லதொரு சமூகத்தை கட்டமைப்பதுதான் நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கூட. பல்வேறு கலாச்சாரங்களைத் தாங்கிய உப கண்டமாய் நிற்கும் நமது நாட்டின் ஒருமைப்பாடு சிதையாமல் காப்பதும் நமது கடமை.

ஜனநாயக அரசியல் அதிகாரத்தின் மீது உமிழும் வெறுப்பு நெருப்பு நாளடைவில், சர்வாதிகாரத்துக்கு வழி கோலும் என்பதை மறக்கவே கூடாது.

ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் திரண்டிருப்போர் விதித்திருக்கும் நிபந்தனைகள் நடந்தாலும், மக்களின் பிரச்னைக்கு அது தீர்வாகிவிடுமா? ஒருகாலும் இல்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு கொண்டிருக்கும் இதே வேளையில் தமிழகத்தின் கிராமங்களில் நமக்கு சோறு போடும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன்

>>>> வெறும் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் கடனை திருப்பித் தர முடியாமல்,
>>>> தன் கண்ணெதிரே தனது உயிருக்கு உயிராய் வளர்த்த பயிர்,
>>>> பாசன வசதியின்றி கருகிக் கொண்டிருப்பதை காண சகிக்காமல் …
>>>> தனது குடும்பத்து நல்லது, கெட்டது நிகழ்வுகள் எல்லாம் கனவாகிப் போன துன்பத்தில்,
>>>> விரக்தியின் விளிம்பில்,

தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளின் பரிதாப நிலைக்கு எந்தக் கூட்டம் திரளப் போகிறது?


அண்மையில்தான் இரண்டு முறை தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், திருவள்ளுர் என்று பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லாமல், பொங்கல் திருநாள் கொண்டாடாமல் களையிழந்து கிடக்கும் இழவு வீடுகளைக் கண்டு திகைப்புற்று நின்றேன்.

கனத்த கயிற்றுத் தாலிகளும், கை நிறைந்த வளையல்களும், தலை நிறைய சூடிய மலர்களும், சுருக்கம் விழுந்த முகம் நிறைய பூசப்பட்ட மஞ்சளுமாய் இருந்த அந்த அபலைகள்தான் தாலி அறுக்கும் சடங்குக்காக காத்திருக்கிறார்கள் என்பதை கற்பனைச் செய்யவும் முடியவில்லை. உரையாடல் தொடங்கும் முன்பே துளிர்க்கும் அந்த கண்ணீர் காவேரியைதான் நினைவுறுத்துகிறது.

இதுவரையிலும், எந்த அரசியல் தலைவரும் அவர்களை சந்திக்கவில்லை. ஒரே ஒரு வார்த்தை ஆறுதல் மொழியும் சொல்லவில்லை. இந்த ஒரு சொல் ஆதரவு மொழிக்காக, சென்னையிலிருந்து சென்றிருந்த எங்களை வழியனுப்ப சரியான தார் சாலைகள் இல்லாமல், மின்வசதிகளும் இல்லாமலிருந்த அந்த குக்கிராமவாசிகள் ஊர் எல்லைவரை வந்து நின்றார்கள்.

சுவர்கோழிகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில், மின்மினிகளின் வெளிச்சத்தில் வழி அனுப்பி வைத்த நிகழ்வுகள் தாங்க இயலாதவை. மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டைவிட அதி முக்கியமானவை. உடனடியாக செயல்பட்டு விவசாயிகளின் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டியவை.

இப்படி கொள்ளைப் போகும் விவசாய நிலங்கள், வறட்சியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகள், இன்னும் விடாப்பிடியாய் நிலங்களை உழுது பயிரிட்டு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் விவசாய பெருமக்கள், மதுவால் சீரழிந்துவரும் இளைய சமூகம் என்று தமிழகம் அதி தீவிர பிரச்னைகளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றின் புறமும் கவனம் செலுத்த வேண்டியது இதே இளைஞர்களின் பொறுப்புதான்!

ஆரம்பத்தில் சொன்னதுபோல, அதிகார குவிமையங்களான குடும்பங்களிலிருந்து அதிகார மீட்டெடுப்பு பணிகளைத் துவங்கி, பராளுமன்றம்வரை அதை நீட்சி அடைய செய்யுங்கள் இளைஞர்களே..!

வெறும் எரிநட்சத்திரமல்ல நீங்கள் தோன்றி மறைந்திட …!

மீகாமனுக்கு “வழிகாட்டும் விண்மீன்கள்“ என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.!
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive