தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வறட்சியால் மனமுடைந்து இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து நடந்ததை தெரிந்து கொள்வதற்காக 04.01.2017 அன்று சென்றிருந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்தது. களத்தில் நேரிடையாக கண்ட நெஞ்சை பதற வைக்கும் செய்திகள் இவை. - இக்வான் அமீர்
”ஏழைகள் ஆதரவு பாஜகவுக்கு அதிகரிக்கிறது!“ – என்று நாட்டின் வடபகுதி தில்லியில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா சொல்லி வாய் மூடும் முன்னரே நாட்டின் தென்பகுதியான தமிழகத்தில் வறட்சியால் அன்றாடம் உயிரிழக்கும் விவசாயிகளின் மரணப்பட்டியல் நெஞ்சை பதறச் செய்கிறது. புத்தாண்டு அன்று மட்டும் 36 விவசாயிகள் மரணமுற்று நீங்காத நினைவுகளாய் ஆகிப் போனார்கள். இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் இறப்பெய்திய துயரம் நிகழ்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக நாகை மாவட்டம் 30-க்கும் அதிகமான மரணங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், ஓவர்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரைராஜ் (40). மனைவியின் பெயர் வைஜெயந்தி மாலா (45). டி.மேகலா (26), டி.கோபிகா (24), டி.மணிகண்டன்(21), டி.கனகராஜ் (20) என்று இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என்று நான்கு பிள்ளைகள். பாசன வசதியின்மையால் கருகிப் போன தனது இரண்டு ஏக்கர், பயிர்களைக் கண்டு மனமுடைந்து தூக்கிட்டு வாழ்வை முடித்துக் கொண்டவர்.
”பத்து நாள் கூலி வேலைக்கு போனாரு. அதன்பிறகு, வயலுக்கு போயிட்டு வந்தவரு, வயலு மோசமாக கிடந்ததை பார்த்துட்டு, ”எப்படி கடன அடைக்க போறேன்? பொண்ணு கல்யான கடன எப்படி திருப்பி தரப்போறேன்னு?” - புலம்பிட்டிருந்தாரு. சாயந்தரமா போனவங்க எங்க போனாங்கன்னே தெரியலே..! மறுநாள் காலையிலே பக்கத்து வயல்லே தூக்குலே பொணமா கெடந்தாரு..!” – கண்கலங்குகிறார் வைஜெயந்தி மாலா 09.12.2016 அன்று நடந்த சம்பவத்தை நினைத்து. “அரசு இதுவைரை எந்த உதவியும் செய்யவில்லை!“ - என்கிறார் இவர்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''

வழியில் சந்தித்த விவசாய சங்கத் தலைவர், நீடாமங்கல ஒன்றியம் – பூசாந்திரம், ”மரணமுற்ற விவசாயிகள் அனைவரும் அதிர்ச்சியிலும், செலவுகளை இனி ஈடுகட்ட முடியாதே என்ற கவலையிலும் இறப்புக்குள்ளானவர்கள். மழைப் பொய்த்து போனதும், காவிரி நீர் கிடைக்காததும், வைச்ச பயிர் காய்ந்து போனதும் இனி விவசாயத்தை நம்பி வாழ முடியாது என்ற சூழலையும் ஏற்படுத்திவிட்டது!“ – என்று சொன்னது நினைவில் எழுந்தது.
இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகை முறையில் பயிரிட்டுவந்த திருவாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வட்டம், கோட்டூர் ஒன்றியம், ஆதித்தியபுரம், பெரிய குளக்கரைத் தெரு, 36 வயது விவசாயி அழகேசனின் நிஜக்கதை இது. மனைவி ஆரோக்கிய மேரி (32), பட்டப்படிப்பு படிக்கும் மகள் இலக்கியா மற்றும் வேதப்பிரியா (16) ஒன்பதாவது படிக்கும் மகன் அகிலவன். இவர்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி அதிர்ச்சியால் 04.11.2016 அன்று உயிரிழந்த அழகேசனின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
”தண்ணியில்லாததாலே… நெல்லு முளைக்கவேயில்லேன்னு சொல்லிகிட்டு தினந்தோறும் வீட்டுக்கும், வயலுக்குமா அலைஞ்சிட்டேயிருப்பாங்க..! நாலாந்தேதி அவங்க வயலுக்கு போயிட்டாங்க. நான் வேலைக்குப் போயிட்டேன். எங்க பசங்களும் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க. சாயந்திரமா திரும்பிவந்து அப்பா எங்கன்னே கேட்டா பசங்க யாருக்கும் தெரியலே..! பிறகு வயல்லே மயக்கமா கிடந்தாங்கன்னு வயல்லேயிருந்தவங்க சொன்னாங்க. உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைச்சு பார்ததுலே ஏற்கனவே அவங்க இறந்துட்டதா சொன்னாங்க” – என்கிறார் ஆரோக்கிய மேரி. குளத்து புறம்போக்கில் வாழ்ந்துவரும் இவருக்கு சொந்தமாக வீடில்லை. பிள்ளைகள் தொடர்ந்து படிக்க வசதியுமில்லை. இழப்பீட்டுடன் இதுவே இவரது தற்போதைய அவசரத் தேவைகள்.
”விவசாயிகள் தற்கொலை என்பது வேளாண் பொய்த்துப் போவதால் ஏற்படும் ஒரு துன்பயியல் சம்பவமாகும். இது குறிப்பாக வேளாண் இடுபொருட்கள், வேளாண் சார்ந்த கட்டமைப்புகள் எதுவானாலும் நீரியியல் ஆதாரத்திலிருந்து பெறப்படுபவை. அந்த நீர் என்பது இன்றைக்கு காவிரி பாசனத்திலிருந்து கிடைக்கக் கூடிய ஒன்றாகும். காவிரி பாசனம் என்பது அரசியல் ஆக்கப்பட்டுவிட்டதால், சாகுபடிக்கு நீர் கிடைக்காமல் விவசாயம் பொய்த்துப் போவதால் அதைப் பார்த்து மாண்டு போகும் அவலம் நடைபெற்று வருகிறது.
எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல, சாகுபடி பொய்த்துப் போனநிலையில், விவசாயிகள் தற்கொலை சூழலில், கெயில் நிறுவனம் தனது பணியை துவங்கியுள்ளது. இதை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்”- என்கிறார் வழக்குறைஞரும், குறுவிவசாயியுமான அரசு தாயுமானவன்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கீழதெரு, வாய்மேடு, உடைய தேவர் காடு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது சுப்பிரமணியன். வாழை விவசாயம் கண்முன்னால் பாசன வசதியின்றி கருகிப் போவதைக் கண்டு மாண்டுபோனவர்.
அடுத்ததாக, நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தகட்டூர் அறைக்கல் கரையைச் சேர்ந்த 80 வயது முருகையா பிள்ளை. விவசாயம் பொய்த்துப் போன அதிர்ச்சியில் காலமெல்லாம் தனக்கு வாழ்வளித்த மண்ணில் பிணமாகக் கிடந்த விவசாயி! மனைவி குஞ்சம்மாள். பிள்ளைகள், வெங்கடாசலம் (45), கோவிந்தராஜ் (40), உலகநாதன் (35)
திருத்துறைப்பூண்டி, எழிலூர், மேலதெரு, ரகுநாதபுரம் கோவிந்தராஜ் (70) பாசன வசதியின்றி வாடிய பயிரைக் கண்டு தனது கதையை சுயமாக முடித்துக் கொண்ட விவசாயி. இவரது மனைவியின் பெயர் ராஜலட்சுமி (60), மகள் கலைமகள் (41), பிள்ளைகள் முருகதாஸ் (36) மற்றும் நீதியரசன் (30) இருவரும் விவசாயிகள். தந்தையாரின் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள்.
”விவசாயிகள் இலவச மின்சாரம் பெற ரூபாய் 50 ஆயிரம் முன்பணம் கட்டியாக வேண்டும். இப்படி பணம் கட்டி 20 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். அதேபோல, கர்நாடகம் தண்ணீர் தருவதில்லை என்பது பிரதான குற்றச்சாட்டு. ஆனால், அந்த தண்ணீரை தேக்கி வைப்பதற்கான பிரத்யேகமான எந்தவொரு திட்டமும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை.
அதேபோல, காவிரியில் உபரியாக திறந்துவிடப்படும் நீரைத் தேக்கி வைக்கக்கூட நம்மிடம் எந்த வசதியும் இல்லை என்ற நிலையில் சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கும் அவலநிலை. நிலத்தடி நீரை தேக்கி வைப்பதற்கு தோதாகதான் கர்நாடகம் பல புதிய ஆறுகளை வெட்டுகிறது. இத்தகைய நோக்கத்தை நாமும் புரிந்துகொண்டு இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்டினால்… நிலத்தடி நீரை நம்மாலும் சேமிக்க முடியும்!” – என்கிறார் விவசாய நல ஆர்வலரும், விவசாயிகளுக்கான பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்துவருபவருமான பொன் ரவிச்சந்திரன்.
ஆடை நெய்பவன் நிர்வாணமாக நிற்பது தேச நிர்வாணத்தின் அடையாளம் எனலாம். அதேபோல, நெல்லை உற்பத்தி செய்து தேச மக்களின் பசியாற்றும் ஒரு சமூகம் மனமுடைந்து தற்கொலைக்குத் தள்ளப்படுவதும், தாளாத மன உளைச்சல்களுக்கு ஆளாவதும் ஒரு தேசத்தின் மரணம் அன்றி வேறென்ன?
0 comments:
Post a Comment