NewsBlog

Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு - பண்பாட்டுக் கொண்டாட்டமும், நவீன புரிதலும்

மேலத்தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் பிரிவு கல்லணைக் கால்வாய்களில் ஒன்றான புது ஆற்றுப்பாசனத்தில் உள்ள ஊர் வடக்கூர்.

சிற்றூர் எனக் கூற முடியாது; ஏனெனில் ஆயிரம் தலைக்கட்டுகள் உள்ள கொஞ்சம் பெரிய ஊர்.

அந்த ஊரில் பிறந்து 1980 வரை அங்கு வாழ்ந்தவன். எங்கள் ஊரின் மந்தை அந்த வட்டாரத்தில் பிரபலம். மந்தை என்பது பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக தை ஐந்தாம் நாள் கொண்டாடப்படும் ஏறு தழுவுதல் அல்லது மாடு பிடித்தல் அல்லது ஜல்லிக்கட்டு.

இதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன்.

தென் இந்தியத் தீபகற்பத்தின் முனையில் இருக்கிற தமிழ்நாடு, கேரளம்,ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நிலப்பகுதிகளில், தமிழ்நாடு நீண்ட மேய்ச்சல் நிலப்பகுதியைக் கொண்டிருக்கிறது.

இதனை முல்லை நிலம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இப்பகுதியில் கால்நடைகள் வளமாக வாழ்வதற்கான இயற்கைக் கூறுகள் உண்டு.

எங்கள் ஊரிலும் ஊரின் நான்கு பகுதிகளில் நீண்ட மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. ஊரில் உள்ள மாடுகள் எல்லாம் காலை எட்டு மணியளவில் ஊரின் பொது இடத்திற்கு வந்து சேரும். மாடுகளை வீட்டில் இருந்து பொது இடத்திற்கு விரட்டி விடுவார்கள். அவற்றை மேய்ப்பதற்குப் பொதுவான ஒரு குடும்பத்தினர் இருந்தனர். அக்குடும்பம் மாடுகளை ஓட்டிச் சென்று நாள் முழுவதும் புல்வெளிகளில் மேய்ந்த பிறகு மாலை வீடுகளுக்குத் திருப்பி ஓட்டி வருவார்கள். இது நாள்தோறும் நடைபெறும்.

இந்த மாட்டு மந்தையில் 'சாமி மாடு' அல்லது 'ஊர் மாடு' அல்லது ’பொலி காளை’ என ஒன்றிரண்டு காளைகள் இருக்கும். அவை கொழுகொழுவென வளமான சதைப்பிடிப்போடு நீண்ட கொம்புகளோடு ஊரைச் சுற்றி வலம் வரும்.

'பொலி காளை போல் அலைகிறான்’ ‘ ஊர் மாடு போல் சுற்றுகிறான்' என்பது ஊரில் உள்ள சொலவடை. வீட்டு வேலைகள் செய்யாமல் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு மேலே சொன்ன சொலவடைகள் பொருந்தும்.

இப்படியான பொலி மாடுகளே மந்தைகளில் ஏறுதழுவுதல், பட்டிகளில் அடைத்துத் திறந்துவிட்டுப் பிடிக்கும் ’வாடிவாசல்’ ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் காளைகள் ஆயின.

ஒரு ஊரின் பொலிமாட்டை அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் 'மஞ்சுவிரட்டு' அல்லது மாடு பிடித்தல் நிகழ்ச்சிகளுக்குக் கொண்டு செல்வார்கள். இந்த நிகழ்வு எனது இளம் வயது முதல் (1960) இருபத்து ஐந்தாம் வயது வரை (1980) நான் நேரில் கண்ட காட்சி. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, தேனீ எனப்படும் பகுதிகளில் இவ்வகையான காளைகளைக் கொண்டு நடைபெறும் இக்கொண்டாட்டம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. புதிதாக உருவானது இல்லை.

மேலே சொன்ன இந்த இயல்பான பண்பாட்டு நிகழ்வுக்கு வரலாறு உண்டா என்று தேடினால் தொடர்ச்சியாக வரலாற்றுத் தரவுகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.

வரலாறுகள் என்பவை மக்களின் அன்றாட புழக்கத்தில் உள்ள நிகழ்வுகள். கல் போன்ற ஊடகங்களில் பதிவாகியிருக்கும் செய்திகள், தொல்பழம் இலக்கண இலக்கியங்களில் பேசப்படும் நிகழ்வுகள் ஆகிய பிற தரவுகளைக் கொண்டு வரலாறு கட்டமைப்பு செய்யப்படுகிறது. நடைமுறையில் இருக்கும் நிகழ்வுகளிலிருந்து பழைய நிகழ்வுகள் குறித்த தரவுகளைப் புரிந்து கொண்டு வரலாற்றை எழுதலாம். இது புனைவாக இருக்காது; இருக்கும் தரவுகளைத் தர்க்க மரபில் ஒழுங்குபடுத்தி ஒரு தொடர்ச்சியைக் கண்டறிந்து புரிந்து கொள்வது.

ஜல்லிக்கட்டுக்கு இப்படியான வரலாற்றைக் கண்டறிய முடிகிறது.

திராவிட நாகரிகத்தின் தொல்லியல் தரவாகச் சிந்து சமவெளி நாகரிகம் பல வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் கிடைத்த முத்திரைகளை நவீன முறையில் வாசித்தறிந்து (deciphering) பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு காளையின் கொம்பை ஒரு மனிதர் பிடிப்பது போன்ற முத்திரை கிடைத்துள்ளது. இதனை ஏறு தழுவுதல் நிகழ்வின் தொடக்க காலத் தரவாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவ்வகையான உருவம் பொதித்த சிற்பங்கள் பிற்காலங்களிலும் கிடைத்துள்ளன. மேய்ச்சல் நிலம் சார்ந்த வாழ்க்கையின் ஒரு குறியீடாக இதனைக் கொள்ள முடியும். மேய்ச்சல் சமூகம் என்பது உலகம் தழுவிய ஒரு நிகழ்வு.

சிந்து சமவெளி நாகரிக தொடர்ச்சி என்பது நமது தொல்பழம் இலக்கியப் பிரதிகளில் பேசப்பட்டுள்ளது. மலைபடுகடாம்,பட்டினப்பாலை,சிலப்பதிகாரம் ஆகியவற்றில் ஏறு தழுவுதல் பற்றிய செய்திகள் பேசப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் பிற்பட்ட கலித்தொகையில் முல்லைக்கலி எனும் பகுதியில் ஆயர் இன மக்கள் வாழ்க்கைப் பேசப்படுகிறது. மாடுகளோடு வாழும் மக்கள் ஆயர் மக்கள். ஏறு தழுவுதல் எனும் நிகழ்வு அவர்களிடத்தில் செல்வாக்குடன் இருந்ததை பல பாடல்களில் காண்கிறோம்.

"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்"

எனும் கலித்தொகைக் குறிப்பு ஆயர்மகள் தனது காதலன் ஏறு தழுவும் வீரியம் உடையவனாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக கொள்ள மாட்டாள் என்று கூறுகிறது. இதன் மூலம் காளைகளுக்கும் ஆயர் மக்களுக்கும் இருந்த உறவைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது செல்வமே கால்நடைகள் தாம். `மாடு’ என்ற சொல்லுக்கு ’செல்வம்’ எனும் பொருள் தமிழில் உண்டு. இதனை திருவள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிகம் சங்க இலக்கியப் பிரதிகள் ஆகியவை வழியாக தொடரும் இவ்வரலாறு 15ம் நூற்றாண்டுக்குப் பின் குறிப்பாக நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தியபோது ஏறுதழுவுதல் நிகழ்வை ’ஜல்லிக்கட்டு’ என்று அழைத்திருப்பதை அறிகிறோம். ஜல்லி என்பது சல்லி என்ற சொல்லின் மணிப்பிரவாள வடிவமாகக் கருதப்படுகிறது. காளையின் கொம்பில் கட்டப்படும் சல்லிக்காசுகள் சார்ந்து ’ஜல்லிக்கட்டு’ பெயர் உருவானதாகக் கருதுகிறார்கள். தமிழ் லெக்சிகனிலும் இவ்வகையான பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஏறுதழுவுதல் ’ஜல்லிக்கட்டு’ ‘மஞ்சுவிரட்டு’ ’மாடு பிடித்தல்’ எனப் பல பெயர்களில் வட்டாரம் சார்ந்து வழங்கப்படுகிறது.

இந்த பண்பாட்டுக் கொண்டாட்டம் தடைசெய்யப்பட்டிருப்பது தொடர்பான சில குறிப்புகளைப் பதிவு செய்யலாம்.

காளைகள் இக்கொண்டாட்டத்தில் துன்புறுத்தப்படுவதாக் கருதும் மனநிலை மேலோட்டமானது. ஆதிக்க சாதி சார்ந்த மனநிலை; நகரியப் பண்பாடு சார்ந்த புரிதல், அதிகார வெறி சார்ந்த செயல் என பல பரிமாணங்களில் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பண்பாட்டு நிகழ்வுகள் சார்ந்த மேட்டிமைத்தனம் இதில் முதன்மையாகச் செயல்படுகிறது. மேட்டிமைத்தனம், வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக நாய், பூனை ஆகிய பிற குறித்துக் கொள்ளும் ஐரோப்பிய மரபு சார்ந்த மனநிலை; காளைகள் குறித்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அடிப்படையான வேறுபாடுகள் குறித்த புரிதல் இல்லை. இதனைக் களம் சார்ந்த மக்கள் வாழ்நிலை, வாழ்வாதாரம், பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் ஆகிய பலகூறுகளில் புரிந்து கொள்ளும் மனநிலை மேட்டிமைத்தனத்தோடு செயல்படுபவர்களுக்கு இருப்பதாகக் கருத முடியாது.ஜல்லிக்கட்டு விவகாரம்: பா ஜ க இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

விலங்கினங்கள், பயிரினங்கள் ஆகிய பிறவற்றில் வட்டார மரபுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, இறக்குமதி சார்ந்த மரபுகளை நவீன உலகமயக் கோட்பாடுகள் முன் வைக்கின்றன.

காளைகளில் உள்ள பல்வேறு வகையினங்கள், இவ்வாறான கொண்டாட்டங்களால் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு உருவாகிறது. இவ்வாய்ப்பைத் தடுப்பதன் மூலம், ஒரே வகையான உயிரின மரபுகளை,வணிக நோக்கில் முதன்மைப்படுத்த முடியும். இதன் மூலம் உலகம் தழுவிய வணிக முறை உருவாக்கப்படும். உணவுப் பொருட்கள் சார்ந்து இப்போது கட்டமைக்கப்படும் இவ்வகையான உலகமயம், வட்டார மரபுகளை அழிக்கும் பணியில் தீவிரமாகச் செயல்படுவதாகக் கருத முடிகிறது.

தமிழகத்தில் ஆலம்பாடி, புளிகுளம், உம்பலஞ்சேரி, பருகூர், மலைமாடு, காங்கேயம் எனப்படும் காளை வகையினங்கள் உள்ளன.

இதில் ஆலம்பாடி வகை இப்போது இல்லை. அழிந்து விட்டது. ஜல்லிக்கட்டுத் தடை மூலம் படிப்படியாக வட்டார வகையின் அழிவு உருவாகும். சீமை சார்ந்த வகையினங்கள் இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்படும். இவ்வகையில் வட்டார மரபுகளே அழிந்து போகும் சூழல் உருப்பெறும்.

நன்றி: பி.பி.சி - தமிழ்.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர்)
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive