NewsBlog

Tuesday, April 9, 2019

தேர்தல்கள் 2019: அந்த வம்பனின் வம்பு!


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனக்கு ஆண்டு சரியாக நினைவில் இல்லை. 1986 லிருந்து 1990-களுக்குள்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அப்போது நான் சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தேன். ஜமாஅத்தின் ஊழியனாகவும் இருந்தேன்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முக்கிய ஆளுமைகளான பேரறிஞர் காலஞ்சென்ற குத்புதீன் அஹ்மது பாகவியும், பேரறிஞர் வேலூர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானியும் அசோக் லேலண்ட் நிறுவனத்தை பார்வையிட வந்திருந்தார்கள். அதற்கான முறையான அனுமதியும் நிறுவனத்திடமிருந்து பெற்றாகிவிட்டது.

வாகன உற்பத்தியில், ஆசியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கடைசியாக எல்லா உதிரி பாகங்களையும் இணைத்து வாகனத்தின் உடற்பகுதியாக மாற்றும் சேசிஸ் அசெம்பிளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது.

தொலைவில் கப்போர்ட்டுகளின் மீது அமர்ந்திருந்த செல்வராஜ் குதித்து ஓடிவந்தான். "பாகிஸ்தான்வாலா … பாகிஸ்தான்வாலா!" - என்று சத்தமாக விருந்தினரின் நீண்ட ஆடைகளையும், தாடி, தொப்பிகளையும் கிண்டல் செய்து கத்த ஆரம்பித்தான்.

செல்வராஜ் ஒரு வம்பன் என்று நேரில் கண்டிருக்கிறேன். ஆனால், அநாகரிகமாக தனது நிறுவனத்தை பார்வையிட வந்திருக்கும் விருந்தினரிடம் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

கோபமும், அவமானமும் சூழ்ந்து கொண்ட தருணமிது.

பேரறிஞர் குத்புதீன் அஹ்மது பாகவி, பேரறிஞர் வேலூர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானி இந்த ஆளுமைகளின் பாசறையில் நேரடி ஒழுக்கப் பயிற்சி பெறும் வாய்ப்பு பெற்றிருந்ததால் அந்நிகழ்வை ஒரு புன்சிரிப்புடனும், மென்மையுடனும் கடக்க வேண்டியிருந்தது.

இது, அத்துடன் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.

“இந்தியா ஜிந்தாபாத்!” - என்று சொல்லுங்கள் என்றான் எங்களை இடைமறித்த அந்த வம்பன் செல்வராஜ்.

நாங்கள் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். பிறகு ஒரே குரலில் அழகு தமிழில் சொன்னோம்: “இந்தியா.. வாழ்க..!”

பொட்டில் அறைந்தாற்போல அந்த வார்த்தைகள் வம்பன் செல்வராஜை பாதித்திருக்க வேண்டும். மௌனமாக விலகி வழிவிட்டான்.

அதே மென்மையுடன், புன்னகையுடனேயே நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம்.

இந்தியா மத துவேஷங்களின் உச்சக்கட்டத்தில் ஒரு தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த நேரத்தில் இந்த சம்பவம் நினைவில் எழுவதை என்னால் தடுக்க இயலவில்லை.
 
 


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive