ஒருவர் தமது பொருளொன்றை மற்றொருவரின் பாதுப்பில், பொறுப்பில் ஒப்படைப்பதற்கு “அமானிதம்“ என்பார்கள் அதாவது அந்த பொருள் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டது என்பதாகும். அப்படி ஒப்படைக்கப்பட்ட பொருள் பணமோ, செல்வமோ, நிலபுலன்களோ, பதவிகளோ எதுவாயினும் பொறுப்போடு பாதுகாத்திட வேண்டியது அதைப் பெற்றுக் கொண்டவரின் கடமையாகும். இது மறுமையில் , இறைவனின் சந்நிதானத்தில் பதில் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பாகும்.
அமானிதம் என்ற சொல்லுக்கான பொருளை இன்னும் விரிவான முறையில் நபிகளார் விளக்குகிறார்:
”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே..! உங்கள் பொறுப்பில் உள்ளவர் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் தமது பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார். குடும்பத்தலைவர் தமது குடும்பத்தார்க்கு அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவார். குடும்பத்தலைவியும் பொறுப்பாளரே! அவர் தமது பொறுப்பில் உள்ளவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்து கேள்வி கேட்கப்படுவார். எஜமானர் பொறுப்பாளரே! அவர் தமக்கு கீழ்ப் பணிபுரியும் பணியாட்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார்!” – என்று அமானிதத்துக்கு நெடிய பொருளைத் தருகிறார் நபிகளார்.
துரதிஷ்டவசமாக அமானிதம் என்ற சொல் தனது அசல் பொலிவை இழந்து வரும் நேரமிது. மோசடியும், பித்தலாட்டமும் மிகைத்துப் போன சூழலில், ”தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களைக் காப்பாற்றாதவன் இறை நம்பிக்கையற்றவன். தந்த வாக்குறுதியை நிறைவேற்றாதவன் இஸ்லாத்தைப் புறக்கணித்தவன்!” – என்று நபிகளார் கடுமையாக விமர்சிக்கிறார். இம்மையின் வெற்றிகள் அனைத்தும், மறுமையின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு தருபவையாக இருத்திடல் வேண்டும். ”இறைவா! நான் பசி, பட்டினியிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். ஏனெனில், இது தீய தோழனாவான். இறைவா..! நேர்மை தவறுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். ஏனெனில், இது மோசமான நண்பனாவான்” -என்று மனிதனைப் பலவீனப்படுத்தும் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறார் அவர்.
ஒருவர் மற்றொருவரிடமிருந்து நிலமொன்றை வாங்கினார். அதை உழும்போது, அந்த நிலத்தில் பொற்காசுகள் புதையலாக கிடைத்தன. அதை நிலத்தை தமக்கு விற்றவரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றார் அவர். ஆனால், நிலத்தை விற்றவரோ, நிலத்தை விற்பனை செய்தது, அந்த நிலத்திலிருப்பவற்றையும் சேர்த்துதான். அதனால், அந்த புதையல் நிலம் வாங்கியவருக்குதான் சொந்தம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். கடைசியில், வழக்கு நீதிபதியிடம் சென்றது. வழக்கை தீர விசாரித்த நீதிபதி, உங்களுக்கு குழந்தைகள் உள்ளனரா?” – என்று கேட்டார். ”ஆம்..! எனக்கொரு மகன் இருக்கிறான் - என்று ஒருவர் சொல்ல, ”எனக்கு ஒரு பெண் இருக்கிறாள்!” - என்று இருவரும் பதிலளித்தார்கள்.
”அப்படியானால், இருவருக்கும் மண முடித்து வையுங்கள். அவர்களின் முன்னேற்றத்துக்காக இந்த புதையலாய் கிடைத்த பொற்காசுகளை செலவழியுங்கள்!” – என்று சிக்கலான அந்த வழக்கை தமது சாதுர்யமான தீர்ப்பால் நீதிபதி தீர்த்து வைத்தார்.
வாக்கு சுத்தமான வாழ்வியலை தமது தோழர்க்கு எடுத்துரைக்கும்போது முன் வாழ்ந்து சென்ற ஒரு சமுதாயத்தார் குறித்து நபிகளார் சுட்டிக் காட்டிய சம்பவம் இது.
”இறைவனின் திருத்தூதரே..! ஆளுநர் பொறுப்புக்கு என்னையும் நியமிக்க மாட்டீர்களா?” – என்று கேட்டார் நபித்தோழர் அபூதர்.
”வேண்டாம்.. அபூதரே..! நீங்கள் மிகவும் பலவீனமானவர். இந்தப் பொறுப்பு ஓர் அடைக்கலப் பொருளாகும். மறுமை நாளில் கண்ணியத்தை இழக்கச் செய்வதற்கும், அவமானத்துக்கும் இது வழிவகுத்துவிடும். அதேநேரத்தில், இந்தப் பொறுப்பின் எல்லா சுமைகளோடும் ஏற்றுக் கொண்டு திறம்பட தமது பொறுப்புகளை நிறைவேற்றுபவர்கள் மறுமையில் காக்கப்படுவார்கள்!” - என்று நபிகளார் நபித்தோழர் அபூதரை எச்சரிக்கின்றார்.
ஒருவர் உயரிய கல்வி அறிவு பெற்றிருக்கிறார், மிகச் சிறந்த அனுபசாலியாக இருக்கிறார் என்பது மட்டுமே அவரை எல்லா பதவிகளுக்கும் தகுதியாக்கிவிடாது. அதேபோல, ஒருவர் நற்பண்புகளால் நிறைந்தர் என்பதும், சில சுமையான பொறுப்புகளைச் சுமப்பதற்கு தகுதி பெற்றவர் என்பதும் ஆகாது,
ஒருவர் நபிகளாரின் திருச்சமூகம் வந்தார். ”இறைவனின் தூதரே! இறுதித் தீர்ப்புநாள் எப்போது வரும்?” – என்று வினா எழுப்பினார். அதற்கு நபிகளார் அடுத்தவர் நம்பி ஒப்படைத்த அமானிதப் பொருட்கள் – அடைக்கலப் பொருட்கள் காணாமல் போகும் காலம் வந்துவிட்டால் உலக முடிவு நாட்கள் நெருங்கிவிட்டன என்று அறிந்து கொள்ளுங்கள்!”-என்றார்.
மீண்டும் அந்த மனிதர் கேட்டார்: ”நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள் காணாமல் போகும் காலம் என்றால் என்ன? – இறைவனின் தூதரே! ”
அதற்கு நபிகளார் சொன்னார்: ”பொறுப்புகளைத் தகுதியற்றவரின் கைகளில் ஒப்படைக்கும் காலம் நெருங்கியதும், இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள்!”
(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 22.09.2016 அன்று பிரசுரமானது)
0 comments:
Post a Comment