பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் தீர்ப்பளித்த ஐவர் குழு நீதியரசர்களுக்கும் நன்றி. அவர்கள் நீதமாக நடந்துகொண்டார்களோ அல்லது பாரபட்சமாக நடந்துகொண்டார்களோ அது இப்போது முக்கியமல்ல. தீர்ப்பளிக்கபட்டுவிட்டது. தனது வீடு இடிக்கப்பட்டவன் நீதிமன்றம் போனால், அவனது நிலம் இனி பிடுங்கப்படும் என்று வெளிப்படுத்தும் இந்த தீர்ப்பை வருங்காலத்தில் வழக்குரைஞர்கள் முன்னுதாரணமாக கொள்ள மாட்டார்கள் என்றுகூட நம்பலாம்.
முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. பாபரி மசூதி இடிக்கப்பட்ட ஒவ்வொரு டிசம்பர் மாதமும் ஒரு கட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பெரும் அச்சுறுத்தல், துன்பத்திற்கு ஆளான சமூகத்தார் அவர்கள். நீதி கேட்டு தெருவில் இறங்கி போராடியவர்கள். இவை எல்லாம் இனி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு படிப்பினை மிக்கது.
ஏனென்றால், நன்மையோ, தீமையோ அது அணுஅளவும் பிசகாமல் தீர்ப்புநாளில் பெறவிருக்கும் தீர்ப்பு குறித்து உறுதியான நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். அதேபோல, வஞ்சிக்கப்பட்டவனுக்கும் அதாவது அநீதி இழைக்கப்பட்டவனுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த திரையும் இருக்காது என்பதும் அவர்களின் நம்பிக்கைக்கு உட்பட்டது. அதனால், சர்வ வல்லமை மிக்க இறைசந்நிதி தீர்ப்பு குறித்து இனியும் அவர்கள் உறுதியுடனே இருப்பார்கள். மனித சட்டங்கள் - இறைசட்டங்கள் இடையிலான வேறுபாடும் அவர்களுக்கு இன்னும் ஆழமாக புரிந்திருக்கும்.
முஸ்லிம் சமூகத்துக்கு பெருத்த தலைவலியாக இருந்த... அவர்கள் சுமந்து கொண்டிருந்த... சிலுவைகளுக்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு முடிவுரை எழுதியுள்ளது.
ஒரு வழிபாட்டு தலத்தை இடித்து மற்றொரு வழிபாட்டு தலம் கட்டப்பட்டது என்ற பாபர் மீதான புனைந்துரை தகர்க்கப்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றச்செயல் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
கடைசியில் பெரும் ரத்த களரி பாய்வது தடுக்கப்பட்டது.
உண்மைதான், இதே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும் என்று நீதிபதிகளும் அறியாமலிருப்பார்களா என்ன? குஜராத் கலவரங்களின் மோசமான விளைவுகளுக்கு காரணம் ஆட்சி, அதிகார எந்திரம் கைக்கட்டி, வாய்ப்பொத்தியிருந்ததே என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?
நாடு முழுவதும் வகுப்புவாதிகளின் கோரதாண்டவத்தின் அச்சுறுத்தல் அனைவருக்கும் இருந்திருப்பது யதார்த்தம். அந்த அடிப்படையில் பார்த்தாலும் நீதிபதிகளுக்கு நன்றி சொல்ல முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது.
பாபரி மசூதி இடத்தை எடுத்து ராமர் கோயிலுக்கு தந்த கையோடு, உடன் கோயில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலகெடு அளித்த நீதிமன்றம், காசி, மதுரா உட்பட 3 ஆயிரம் மசூதிகள் கோயில்களாக்க காத்திருக்கும் சங்பரிவார் திட்டத்துக்கு முடிவுரை எழுதியிருக்கலாம். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை.
எல்லாம் முடிந்தது. வழக்கில் யாராவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது யதார்த்தம். முஸ்லிம்கள் எப்போதும் கொடுக்கும் கரங்களாக இருப்பதே நல்லது.
அதேபோல, உச்ச நீதிமன்றம் பாபரி மசூதிக்காக, ஒதுக்கியுள்ள ஐந்து ஏக்கர் இடத்தை மறுக்காமல் பெற்றுகொண்டு, பிரமாண்டமான கல்விசாலையாகவோ, மருத்துவமனையாகவோ அதை கட்டி எல்லா மக்களுக்கும் பயனடையும்படி செய்யலாம். அது பாபர் பெயராலே இருந்துவிட்டு போகட்டும்!
0 comments:
Post a Comment