நாலாயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து சென்ற ‘ஆப்ரஹாம்’ என்றழைக்கப்படும்,
இப்ராஹீம் நபி “இறையடியார்களே, இறைவனின் வீட்டுக்கு வாருங்கள். அலைகடலெனத்
திரண்டு வாருங்கள். அணி.. அணியாக வாருங்கள்.. நடந்தோ, வாகனங்களிலோ
வாருங்கள்!” என்று முதன் முதலாக விடுத்த அழைப்பிற்கான மறுமொழிதான் இது~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மனிதன் மேற்கொள்ளும் பயணங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பிழைப்புக்குப் பொருளீட்ட மேற்கொள்ளும் பயணம். அடுத்ததோ பொழுதுபோக்குக்கான பயணம். பயணங்கள் இரண்டானாலும், இவற்றில் தன்னலமும் இச்சைகளுமே மிகுந்திருக்கின்றன. இவையே அவனை வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லத் தூண்டுகின்றன.
அன்பான உற்றார், உறவுகளைவிட்டு பல ஆயிரம் மைலுக்கு அப்பால் அனுப்புவதும் தன் நலன்சார்ந்த காரணங்களாகவே இருக்கும். இதில் அர்ப்பணம் என்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹஜ் பயணம் இவை எல்லாவற்றையும்விட முற்றிலும் மாறானது. இது இறைவனுக்காகவே மேற்கொள்ளப்படும் பயணம்.
மனிதனின் உள்ளுணர்விலிருந்து வரும் தூண்டலும் இறையின் அழைப்பும் இல்லையென்றால் இந்தப் பயணம் சாத்தியமாகும் வாய்ப்பேயில்லை. தனது வீட்டைத் துறந்து, உற்றார், உறவுகளைப் பிரிந்து, வணிகத் தொடர்புகளை விட்டு இப்பயணத்தை மேற்கொள்வதால், இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அந்த மனிதன் இப்பயணத்தின் மூலம் பக்குவம் அடைகிறான். இறைவனுக்காக எத்தகைய தியாகங்களையும் அவன் மேற்கொள்ளச் சித்தமாக இருக்கிறான் என்பதே இதன் செய்தி.
ஹஜ் பயணத்துக்காக ஒரு மனிதன் முன்னேற்பாடுகளைச் செய்யும்போதே, நன்மைகளின் அருகில் செல்லும் துடிப்பும் அதிகரிக்கிறது. தன்னால் யாருடைய மனமும் புண்படலாகாது என்றும், முடிந்தவரை அடுத்தவருக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற உணர்வும் அவனுக்குள் பிரவாகமெடுக்கிறது. அவன் எல்லாவிதமான தீய செயல்களுக்கும் மூடுவிழா நடத்திவிடுகிறான். அதனால்தான் இந்தப் பயணம் மற்றைய பயணங்களைவிட வேறுபட்ட பயணமாக உள்ளது.
மக்காவுக்கு ஹஜ் பயணம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் ‘இஹ்ராம்’ என்றழைக்கப்படும் எளிமை மிக்க ஒரு வெள்ளாடையுடன் போர்வை, காலணிகளை உடைமைகளாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இறைவனின் திருமுன் உடலாலும் உள்ளத்தாலும், எளிமையாக இருங்கள் என்பதே இதன் செய்தி.
இஹ்ராம் வெள்ளுடையைத் தரித்துக் கொண்டதும், ஒவ்வொரு ஹஜ் பயணியின் நாவிலிருந்தும் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சொல், “இறைவா.. இதோ உன் திருச்சன்னிதியை நோக்கி நான்..! “ என்பதுதான்.
“நான் வந்திருக்கிறேன் இறைவா.. நான் வந்திருக்கிறேன்.. இறைவா..! நான் வந்திருக்கிறேன்! உனக்கு யாரும் இணையில்லை. உன் அழைப்பை ஏந்தி வந்திருக்கிறேன்! பாராட்டுக்குரியவன் நீயே! அருட்கொடைகளுக்குரியவனும் நீயே. அண்டசராசரங்களின் ஆட்சி உனதே.. எங்கும், எதிலும்.. எவரும் உனக்கிணையில்லை.. இறைவா..!” என்ற பிரகடனம் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உண்மையில், இது, நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து சென்ற ‘ஆப்ரஹாம்’ என்றழைக்கப்படும், இப்ராஹீம் நபி “இறையடியார்களே, இறைவனின் வீட்டுக்கு வாருங்கள். அலைகடலெனத் திரண்டு வாருங்கள். அணி.. அணியாக வாருங்கள்.. நடந்தோ, வாகனங்களிலோ வாருங்கள்!” என்று முதன் முதலாக விடுத்த அழைப்பிற்கான மறுமொழிதான் இது.
யுக முடிவுநாள்வரை தொடர்ந்து கொண் டிருக்கும் அந்த அழைப்பிற்கான பதில். இறைக்காதலால் இறையடியான் கட்டுண்டதன் அடையாளமாய் ஒலிக்கும் குரல் இது.
தவாஃப் வலம்
'''''''''''''''''''''''''''''''''
இத்தகைய சிறப்பியல்புகள் பெற்ற ஹஜ் பயணி மக்காவை அடைந்ததும், கஅபா என்னும் இறையாலயத்தை நோக்கி விரைகிறார். அந்த ஆலயத்துக்கு முத்தமிடுகிறார். பிறகு தமது கொள்கை, கோட்பாடுகளுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் கஅபாவைச் சுற்றி ஏழுமுறை ‘தவாஃப்’ என்றழைக்கப்படும் வலம் வருகிறார். ஒவ்வொரு சுற்றும், முத்தத்திலோ அல்லது முத்த சைகையிலோ ஆரம்பித்து, அதேபோலவே முடிகிறது.
இதன் பிறகு ‘மகாம் இப்ராஹீம்’ என்றழைக்கப்படும் இப்ராஹீம் நபி நின்று தொழுத இடத்தில் காணிக்கைத் தொழுகையை நிறைவேற்றுகிறார்.
அதன்பின், தன் பிஞ்சு மகன் இஸ்மாயீல் நபியின் கடும் தாகத்தைத் தீர்ப்பதற்காக நீர் தேடி ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஒடிய தியாகத்தின் திருஉருவமாய் விளங்கும் பெண்மணி ஹாஜிரா அம்மையாரின் வரலாற்றை நினைவுகூர்கிறார். ஹஜ் பயணி வரலாற்றின் நினைவுகளைச் சுமந்தவாறு ஓடுகிறார். மன்னிப்பையும், மகத்துவத்தையும் தேடி நடைபெறும் ஓட்டமது.
அதற்கடுத்து, மினா, அரஃபாத், முஸ்தலிஃபா போன்ற இடங்களில் கடமையுணர்வு மிக்க இறைவனின் சிப்பாயைப் போல ஐந்தாறு நாட்கள் ‘முகாம்’ வாழ்க்கை ஆரம்பித்துவிடுகிறது.
“இறைவன் மிகப் பெரியவன். வழிகெடுக்கும் சைத்தானுக்கும், அவனது கூட்டாத்தாருக்கும் நாசம் உண்டாவதாக!” என்றவாறு மினாவில் கல்லெறியப்படுகிறது. இறைவனுக்கான அடையாளப் பலியாக இப்ராஹீம் நபி செய்தது போலவே ‘குர்பானி’ என்றழைக்கப்படும் திருப்பலி நிகழ்வும் நடக்கிறது.
அதன்பின், கஅபாவுக்குத் திரும்பல், தவாஃப் என்றழைக்கப்படும் வலம் வருதல், திரும்பவும், ‘ஜம்ராத்’ என்றழைக்கப்படும் கல்லெறிதல், ‘தவாஃபே விதா’ என்றழைக்கப்படும் இறுதி வலம் வருதல் என்று ஹஜ் பயணம் நீண்டு.. முடிகிறது.
ஒருவர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு, திரும்பிவரும் வரையிலான சில மாத காலத்தில், எத்தகைய மாற்றங்களை இந்தப் புனிதப் பயணம் ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சி.
காலம், பொருள், ஓய்வு, உலகியல் தொடர்புகள், ஆசைகள் அனைத்தின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இறைவனுக்காகத் தியாகம் செய்யப்படுகின்றன. ஒழுக்கம், இறையச்சம், பெருக்கெடுக்கும் இறையன்பு, இறைத்தூதர் நபிகளார் மீது ஊற்றெடுக்கும் பிரேமை என்று பல தடங்களை வாழ்வில் பதித்து நீங்காத நினைவுகளாக்கிவிடும் பயணம் இது.
கஅபாவைச் சுற்றியும் உள்ள தனது முன்னோர்களின் ஒவ்வொரு வரலாற்றுச் சின்னமும் கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்தோடு ஹாஜியின் உள்ளத்தில் பதித்துவிடுகிறது. இறைத்தூதர் நபிகளாரின் அத்தனை வரலாற்றுப் பதிவுகளும் கண்முன் ஓடி, மனத்தில் நீங்காமல் இடம்பெறுகின்றன.
ஹஜ் பயணம் தரும் பயிற்சிகளோடு ஏற்கெனவே தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற இறைவணக்கங்களில் பெறும் பயிற்சி இறையடியானை மகத்தான மனிதனாக மாற்றிவிடுகிறது. அதுவும், ஒரு நேரத்தில் உலகம் முழுக்க உள்ள இறையடியார்களால் மேற்கொள்ளப்படும் பயணத்தின் விளைவுகள் பூவுலகில் அமைதி தவழச் செய்கின்றன.
(இந்து தமிழ் திசை - நாளேட்டின் இணைப்பான ஆனந்த ஜோதியில், 06.09.2018 அன்று வெளியான எனது கட்டுரை)
இந்து தமிழ் திசை இணைப்புக்கு: https://tamil.thehindu.com/society/spirituality/article24873054.ece
(இந்து தமிழ் திசை - நாளேட்டின் இணைப்பான ஆனந்த ஜோதியில், 06.09.2018 அன்று வெளியான எனது கட்டுரை)
இந்து தமிழ் திசை இணைப்புக்கு: https://tamil.thehindu.com/society/spirituality/article24873054.ece
அருமை.அல்லாஹ் தன் ரஹ்மத்தை எல்லாருக்கும் தந்து அருளுவானாக.!
ReplyDeleteநன்றி. ஆமீன்
ReplyDelete