NewsBlog

Saturday, November 11, 2017

சீமானுக்கு மடல்: 'அந்த வாசிப்புக்கு தக்க தருணம் இதுதான்!



 அன்புள்ள தம்பி சீமானுக்கு,

“நலம் பெற வாழ்த்துகள்..!”

தங்களை, இந்த மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லெண்ணங்களுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

தம்பி சீமான்,

இளமைக்காலந்தொட்டே நீங்கள் முஸ்லிம்களுடன் தொடர்புள்ளோராக இருந்திருப்பீர்கள். இன்னும் மிகச் சிறந்த தொடர்புகள் அந்த சமூகத்திலிருந்து உங்களுக்கு நட்புகளாக கிடைத்திருக்கலாம். அவர்களின் சாயல்கள் உங்களை பாதித்திருக்கலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் முஸ்லிம்கள் மீதான நல்லபிப்பிராயம்கூட விளைந்திருக்கலாம். இருப்பினும் அவர்களின் கொள்கை, கோட்பாடுகளின் வெளிப்பாடுகளை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதை அண்மையில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முஸ்லிம்களின் மேடையில் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டது மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய மேடைகளில் இனி தாங்கள் அடிக்கடி கலந்துகொள்ள வேண்டியிருக்கும். தங்களின் பேச்சுரைகள் முஸ்லிம் சமூகத்து இளைஞர்களை பாதித்திருப்பதன் விளைவாக்கூட இருக்கலாம். தங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிப்பதாகவும் இருக்கலாம். அதனால், இஸ்லாம் குறித்து உங்கள் வாசிப்பும், உள்வாங்கலும் இன்னும் அதிகரித்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதை சொல்லும்போது, நீங்கள் தொப்பி, தாடியுடன் காட்சி அளிக்க வேண்டுமென்றோ, அவர்களின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கஞ்சி அருந்த வேண்டும் என்பதோ பொருளல்ல. நீங்கள் இஸ்லாம் குறித்து மிக ஆழமாக வாசிக்க வேண்டிய தருணம் இது என்பதுதான் நான் சொல்ல வந்த உள்ளடக்கம்.

உலக மக்கள் தொகையில், நாலுபேருக்கு ஒருவர் முஸ்லிம் என்ற விகிதாச்சாரம் கொண்ட ஒரு சமூகத்தாருடன்தான் தாங்கள் தோள் இணைத்திருக்கிறீர்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளால், முஸ்லிம்கள் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமான அடக்குமுறைகளுக்கும், அபாண்டங்களுக்கும், பழிபாவங்களுக்கும், அழிச்சாட்டியங்களுக்கும் தொடர்ந்து ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் தாங்கள் நன்கறிந்தவைதான்.

உலகளவில், இத்தனை சிலுவைகளையும் சுமக்கும் ஒரு சமுதாயமாக இருந்தும் அவர்களை ஒழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாத்தின் எதிரிகள்.

ஏனென்றால், முஸ்லிம்களுக்கு என்று உலகளாவிய ஒரு வழிகாட்டி வேதநூல் இருக்கிறது. அந்த வேதநூலின் வழியிலான செயலுரும் தந்த ஒரு தூதரும் இருக்கிறார். அந்த போதனைகள் வாழ்வியல் ஆளுமைகளாய் முஸ்லிம்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

அதனால், மலைப்போல் எழும் துன்பங்களை எல்லாம் முஸ்லிம்கள் அந்த பேரழகிய ஆளுமைகளைக் கொண்டே தற்காத்துக் கொள்கிறார்கள். எதிரிகளால் திட்டமிடப்பட்டு அவர்கள் தொடர்ந்து வீழ்த்தப்பட்டும், அவர்கள் நிலைகுலையாமல் தங்கள் வாழ்வியல் களத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள். மொழிவாரியாக, இனவாரியாக, நிறவாரியாக, பல்வேறு மண்வாரியாக அவர்கள் தனித்திருந்தாலும் கொள்கையளவில் ஒன்று திரள இந்த அரும் போதனைகளே காரணம்.

தம்பி சீமான்,

நபிகளார் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கத்தரிசி என்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும். சரி… நபிகளார் கொண்டு வந்த செய்திதான் என்ன தெரியுமா உங்களுக்கு?

ரோமப் பேரரசர் ஹெர்குலஸ். அவர் ‘பைத்துல் முகத்தஸ்’ எனப்படும் ஜெருசலேத்தில் இருந்தபோது, நபிகளார் அவருக்கு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. யாராவது ஒரு அரபியர் கிடைத்தால். அவரிடம் நபிகளார் பற்றிய தகவல்களை விசாரிக்கலாம் என்று அவர் காத்திருந்த வேளையில்தான் மக்கத்து குறைஷி பிரமுகர் அபூ சுப்யானையும், அவரது தோழர் சிலரையும் தற்செயலாகச் சந்தித்தார்.

அபூ சுப்யானை நோக்கி ஹெர்குலஸ் இப்படி கேட்டார்: “முஹம்மது உங்களிடம் அப்படி என்னதான் கூறுகின்றார்?’

நபிகளாரிடம் கடும் விரோதம் பாராட்டி வந்தவர் அபூசுப்யான். ஆனாலும், நபிகளார் குறித்து நேர்மையான முறையில்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் இப்படி சொன்னார்:

“ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள். வானங்களிலும், பூமியிலும் இறைவனின் ஆட்சியே நடக்கிறது. சர்வலோகங்களிலும் அவனுடைய ராஜாங்கமே நடக்கிறது. இந்த அதிகாரத்திலும், நிர்வாக அமைப்பிலும் அவன் யாரையும் இணை, துணையாக வைத்துக் கொள்ளவில்லை.

இறைவனின் சக்திக்கு நிகர் வேறு சக்தியில்லை. யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்தி வணங்கிட வேண்டும். அவன் மீதே அன்பு வைக்க வேண்டும்.

இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனை வணங்குவதிலும், இறைவனின் மேலாதிக்கத்திலும் எவரையும் இணை வைக்கக் கூடாது. எல்லாவற்றுக்காகவும் அவனிடமே உதவி கேட்க வேண்டும்.

முன்னோர்களின் கோட்பாடுகளையும், இணைவைப்புச் செயல்களையும் விட்டுவிட வேண்டும்.

தொழ வேண்டும்.

சொல்லாலும், செயலாலும் வாய்மையுடன் வாழ வேண்டும்.

ஆணும் – பெண்ணும் ஒழுக்கத்தையும், கற்பையும் பேணி வாழ வேண்டும்.

சக மனிதர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களே! ரத்த உறவு முறைகளே!”

ஹெர்குலஸ் மன்ன்னிடம், நபிகளார் குறித்து கூடுதல், குறைவின்றி இப்படிதான் அபுசுப்யானால் சாட்சி அளிக்க முடிந்தது. நபிகளாரின் அழைப்பு, அன்னார் கொண்டு வந்த திருச்செய்தியின் உள்ளடக்கம் இதுதான்!

‘அம்ரு இப்னு அபஸா’ என்பது அந்த நபித்தோழரின் பெயர். இவர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தொடக்கக் காலத்தில் நபிகளாரை மக்கா நகரில் சந்தித்தார். அப்போது அவருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடல் இது:

“நீங்கள் யார்?”

“நான் இறைவனின் தூதராவேன்!”

“… இறைத்தூதர் என்றால்…?”

“இறைவன் என்னைத் தனது தூதராக.. அனுப்பியுள்ளான்!”

“என்ன செய்தியுடன் இறைவன் உங்களை அனுப்பியுள்ளான்?”

மக்கள் தம் உறவினருடன் இணைந்து வாழ அறிவுறுத்த வேண்டும்!

இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவக் கொள்கை பரப்ப வேண்டும்!

இறைவனுடன் வேறு எவரையும், எதையும் இணை வைக்கக் கூடாது!

இது போன்ற நோக்கங்களுடன் இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!”

நபிகளார் தமது வருகையின் நோக்கத்தை வாய்ப்பட ரத்தினச் சுருக்கமாக சொன்னது இது:

"இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்த வேண்டும். அந்த உறவு சரியான அடிப்படைகள் மீது நிறுவ வேண்டும். அதற்கான அடிப்படை …. ‘இறைவன் ஒருவன்’ – என்ற ஏகத்துவமாகும். இறைவனின் அதிகாரத்தில் வேறு எவரது தலையீட்டையும் அனுமதிக்கக் கூடாது! இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்.

மனிதர்களுக்கிடையிலான சரியான தொடர்பின் அடிப்படைகள் பரஸ்பர அனுதாபமும், பரிவும், இரக்கமுமேயாகும். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். ரத்த பந்த உறவு முறையினர். அதனால், ஒருவர் மற்றொருவரிடம் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் அநீதிக்கு ஆளாகும்போது, அனைவரும் அநீதி இழைக்கப்படுபவருக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆபத்தில் சிக்கிக் கொண்டோரை ஓடோடிச் சென்று காக்க வேண்டும்"

நபிகளாருக்கு முன் எல்லா இறைத்தூதர்களும் இந்த அடிப்படைச் செய்திகளைத்தான் சொன்னார்கள். அதாவது, ஏகத்துவம் எனப்படும் ஓரிறைக் கொள்கையும், மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும் … முதல் இறைத்தூதருமான ஆதிபிதா ஆதம் அவர்களின் சந்ததிகள். சகோதர உறவுமுறை கொண்டவர்கள் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியின் சாராம்சம்.

முகீரா பின் ஷீஃபா மற்றொரு நபித்தோழர்.

ஒருமுறை, பாரசீகத்து தளபதி ருஸ்தூமுடன் நடந்த உரையாடலில் சொன்னார்:

“அய்யா! நாங்கள் வணிகர்கள் அல்ல. வணிகத்துக்கான புதிய புதிய சந்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு! அது எங்கள் நோக்கமும் அல்ல; எங்கள் இலக்கும் அல்ல. எங்களது நோக்கமும், குறிக்கோளும் மறு உலகம்தான்!

நாங்கள் இறைவனின் கட்டளைகளான இஸ்லாத்தின் கொடியை தோளில் சுமந்து நிற்பவர்கள். அந்த வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைப்பதே எங்கள் குறிக்கோள். வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும், முஹம்மது நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்று சான்று பகர்வதும் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனிதன் தன்னைப் போன்ற சக மனிதனுக்கு அடிபணிவதிலிருந்து அவனை விடுத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதும் இந்த வாழ்க்கை நெறியின் அறிவுரையாகும்!”

இதைக் கேட்ட பாராசீக தளபதி வியந்து சொன்னார்:

“நல்ல அறிவுரைதான்! இன்னும் என்ன சொல்கிறது உங்கள் மார்க்கம்?”

அதற்கு நபித்தோழர் முகீரா பதிலளித்தார்:

“மனிதர்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதும் அந்த அறநெறியின் போதனைகளாகும்”

இவை நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் இறைநெறியின் அடிப்படை செய்திகளில் சில. எவர் விரும்புகின்றாரோ அவரை மனிதர்களின் அடிமைப்படும் தளைகளிலிருந்து விடுவித்து இறைவனுக்கு, எங்கும் வியாப்பித்திருக்கும் அந்த பரம்பொருளுக்கு அடிபணியும் வாழ்க்கை நெறிக்கு அழைத்துச் செல்லும் திருப்பணி இது.

படைத்தவனின் கட்டளைப்படி மனித குலத்தை வாழ அழைப்பதே நபிகளாரின் திருச்செய்தியாகும்.

இஸ்லாம் குறித்து தாங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய வாசிப்புக்கு மேலே நான் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் உங்களுக்கு துவக்கமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

நபிகளார் இந்த திருச்செய்தியை முன்வைத்துதான் காலங்காலமாக பிளவுப்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு குலங்களை, கோத்திரங்களை, உட்கிளைகளை ஒன்றிணைத்து ஒரு தாய் மக்களாக காட்டினார்கள். உலகளாவிய மார்க்கமாய் இஸ்லாத்தை நிலைநிறுத்தினார்கள்.

அதனால், சீமான் இனி தாங்கள் இத்தகைய வரலாறுகளை எல்லாம் வாசித்தேயாக வேண்டியிருக்கும்.

வாழ்க, ஒழிக என்ற கோஷங்களை உச்சரிக்காத முஸ்லிம் பெருமக்களின் மேடைகளை அப்போதுதான் உங்களால் அலங்கரிக்க முடியும்.

எந்த உசுப்பேத்தலுக்கும் ஆளாக்க முடியாத முஸ்லிம் இளைஞர்களின் நன்மதிப்பையும் பெற முடியும். உங்கள் கொள்கை – கோட்பாடுகள், முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றின் ஊடே ஒரு பொதுவெளியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

உங்களின் நன்மையான பணிகளில் முஸ்லிம் இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் முடியும்.

தம்பி சீமான்,

இந்த மடலை ஒரு பத்து நாட்களுக்கு முன்னரே தங்களுக்கு எழுத இருந்தேன். நேரமின்மையால் தாமதமானது.

தங்களுக்கு மடல் எழுத இருப்பதை எனது நண்பர் பாலாவிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார்: முதலில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என்று அவரிடம் சொல்லுங்கள்.!” இத்தனைக்கும் அவர் பத்தரைமாற்று தமிழர். இந்த மண்ணின் ஆதிகுடி!

ஆட்சி, அதிகாரம் வெறும் இனம் சார்ந்ததல்ல. எந்த மதம், மொழி சார்ந்ததும் அல்ல. இந்திய உபகண்டத்தின் அதிகார வரலாறே அதற்கான சாட்சி. பாரசீகத்திலிருந்து வந்த முகலாயர்கள், முஸ்லிம் மன்னர்கள். அவர்களின் உயரிய விழுமியங்கள் நசிந்துபோன நிலையில், வெள்ளைத்தோலுடன், பழுப்பு நிறக் கண்களுடன் எங்கிருந்தோ வந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் என்று கடந்தகால வரலாறு சாட்சியாய் நம் முன் நிற்கிறது.

மனித மனங்களை கொள்ளைக் கொள்ளும் நல்லாட்சியரே நமது நாட்டின் இன்றைய தேவை.

என் கருத்துக்களை பரிசீலியுங்கள். முயலுங்கள். வெற்றியடைவீர்கள்.

இறைவன் நாடினால் மீண்டும் மற்றொரு அறிவுறுத்தலோடு உங்களைச் சந்திப்பேன்.

அன்புடன்,

தங்கள் சகோதரன்,

இக்வான் அமீர்

மூத்த இதழியலாளர்.
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive