NewsBlog

Friday, December 25, 2015

வைகறை நினைவுகள் 24: வேட்டைக்காரன்!


சனி, ஞாயிறு விடுமுறைகளைத் தொடர்ந்து இரண்டாம் வகுப்பு படிக்கும் பேரன் அனஸ், வயிற்றுவலி என்று ஒரு காரணம் சொல்லி பள்ளிக்கு போகாமலிருக்க அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.

அவனது அம்மா அதாவது எனது மூன்றாவது மகள், ஆயிஷா அவனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

அவனது காரணங்கள் செல்லுப்படியாகாது! இன்னும் சற்று நேரத்தில், வன்முறை பிரயோகத்தில் அவன் பரிதாபமாக என்னை பார்த்துக் கொண்டே பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வான்.

“நானாஜீ..! நீங்களாகவது எனக்கு உதவக்கூடாதா?” – என்று அவன் விழியாலே பேசுவது எனக்குப் புரியும். விவரிக்க முடியாத மன வலியோடு நான் மௌனமாகிவிடுவேன்.

அழுது கொண்டே பிள்ளைகள் பள்ளிக்கு போவதை நான் விரும்பாதவன். அவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்புவதையும் எதிர்ப்பவன். அதனால், பெரும் சங்கடத்துடன் எனது அலுவலக அறைக்குள் நுழைந்துவிட்டேன்.

எவ்வளவு கால மாற்றங்கள்!

ஆந்திரத்தை பூர்வீகமாகக் கொண்ட எனது தந்தையார் வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது ஜீவனத்துக்காக தையல் தொழிலைத் தேர்ந்தெடுத்திருந்தார். தாயார் மன்னர் காலத்து இராணுவ வீரர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று எனது அம்மாவின் அம்மா அதாவது எனது பாட்டி பெருமையாக சொல்லிக் கொள்வார்.

இந்த இரண்டு ஜமீன்களும், நெற்றி வியர்வைச் சிந்த உழைத்தால்தான் எங்கள் வாழ்வாதாரம் என்ற நிலையில் எனது கல்விப் பயணம் தொடர்ந்தது.

எனது தந்தையார் பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை. தெலுங்கில் கையெழுத்துப் போட மட்டும் தெரியும். ஆனாலும், அவர் என்னைப் படிக்க வைப்பதில் பேரார்வம் காட்டினார்.

அதேநேரத்தில், அவரோ அல்லது எனது தாயாரோ ஒரே ஒருநாள்கூட என்னை பள்ளிச் செல்ல நிர்பந்தப்படுத்தியதே இல்லை. போகமாட்டேன் என்று நான் ஒருநாளும் பொய்க்காரணங்களை, சாக்குப் போக்குகளையும் சொன்னதில்லை.

வீட்டுப் பாடங்கள் எல்லாம், ‘காடா’ விளக்கு வெளிச்சத்தில் செய்ய வேண்டும் அல்லது காய்ந்த சருகுகள், இலைத்தழைகள் எரித்து விடியற்காலையில் கனப்போடு அந்த வெளிச்சத்தில் படிப்பும் தொடரும். உயர் நிலைப்பள்ளி என்று கொஞ்சம் வளர்ந்த நிலையில், ரயில்வே ஸ்டேஷன் மின்விளக்கு வெளிச்சம் பயனாகும்.

எங்கள் வீட்டில், மின்விளக்கு வசதிகள் எல்லாம் இல்லாத காலம் அது. பள்ளி வாழ்க்கை முடிக்கும்வரை இதேநிலைதான்!

அதேபோல, கட்டணம் செலுத்தி டியூஷன் படிக்கும் வசதி இல்லை. அப்போது, கல்வியும் வணிகமயமாகவில்லை.

இந்நிலையில் தலைப்பாகை, முறுக்கு மீசை என்று பாரதியார் தோற்றத்தில், இருகால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான அய்யா ஆசிர்வாதம் பிள்ளைகளுக்கு மாலையில் இலவச டியூஷன் நடத்திக் கொண்டிருந்தார். அதுவும் ஒரு செய்தித்தாள் விற்பனைச் செய்யும் ஒரு பங்குக்கு அடியில். வசிப்பிடம் அதுதான். டியூஷன் சென்டரும் அதுதான். அவரிடம் சில காலம் டியூஷன் படித்திருக்கிறேன்.

அப்போது, எண்ணூரில் காமராஜர் நகர் பகுதியில் (அப்போது நில அளவீட்டு எண்ணால் - 21 என்று அழைப்பார்கள்) இந்தப் பகுதியில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. உண்மையில், அது மழை நீர் சேகரிப்புக்கான ஏரி என்று இப்போது புாிந்துகொள்ள முடிகிறது. அந்த குளம் முழுக்க தாமரை படர்ந்து பூத்து குலுங்கும். மீன்கள் உட்பட ஏராளமான நீர் வாழ் உயிரினங்களின் வசிப்பிபடமாக அது இருந்தது. கழிவுநீர் குட்டையாகவும், ஆக்கிரமிப்பில் சுருங்கிப்போயும் இன்றும் அந்த குளம் இருக்கிறது.

ஒரு மாலை நேரம்.

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தால் எனது மாமா தாமரைக் குளத்தில் மீன் பிடிக்க சென்றிருப்பதாக தகவல்.

வீட்டிலிருந்து தண்டவாளத்தைக் கடந்து சற்று சிரமப்பட்டு செல்ல வேண்டிய தொலைவில்தான் குளம் இருந்தது.

அன்றைக்கு டியூஷனுக்கு மட்டம் போட்டுவிட்டு குளத்தை நோக்கி நடந்தேன்.

குளத்துக் கரையில் அமர்ந்து எனது மாமா (அம்மாவின் உடன்பிறப்பு) தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து அவ்வளவு தூரம் ஏன் வந்தேன் என்று கடிந்து கொண்டு பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

சிறிது நேரம் சென்றிருக்கும்.

நான் டியூஷனுக்கு செல்லாததை எப்படியோ தெரிந்து கொண்டு குளக்கரைக்கு வந்துவிட்டார் எனது தந்தையார்.

பிறகு?

பிறகென்ன? கையும் களவுமாய் சிக்கிய திருடனைப் போல என்னை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு டியூஷன் நடக்கும் இடத்துக்கு சென்றார்.

அடியா அது?

நடுரோட்டில், பொது ஜனங்கள் முன்பாக, டியூஷனில், பெண் மாணவிகளின் முன்பாக மிதி மிதி என்று மிதித்து, அடித்து துவைத்துவிட்டார்.

கோபம் வந்தால் அம்மா எனது உடைகளின் ‘தூசு’ தட்டுவார். மற்றபடி சொல்லிக் கொள்வதைப் போல, எனது பெற்றோரிடம் நான் அடிவாங்கியது இல்லை.

என் நினைவில் மறவாமல் பதிந்திருக்கும் அடி, உதை சம்பவம் இது. என்னை நெறிப்படுத்த உதவிய சம்பவம். அடிப்பட்ட அந்த இடங்களை இப்போதும் மென்மையாக நான் வருடி விடுகிறேன். எனது தந்தையாரின் மெல்லிய தேகத்தின் ஸ்பரிசம் தெரிகிறது.

அதன் பின் இத்தகைய ஒழுக்க மீறல்களை நான் செய்ததேயில்லை. மிகச் சிறந்த மாணவனாகவே பெயர் எடுத்திருக்கிறேன். ஆரம்ப பள்ளி நாட்களில், சபாநாயகராக செயல்பட்டிருக்கிறேன். நாடகங்களில் அலெக்ஸாண்டராக நடித்திருக்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற செயலாளர் என்று பெரும் பொருப்புகளை சுமந்திருக்கிறேன். எனது உயர்வின் அந்தப் பெருமைகளை என் தந்தையாரின் கண்களில் வெளிப்படச் செய்திருக்கிறேன்.

எந்த மீன் பிடி சம்பவத்தால், எனக்கு அடி, உதை கிடைத்ததோ பின்னாளில் நிலைமை அப்படியே மாறி போனது. நான் வளர்ந்த போது எனது தந்தையாரின் மிகச் சிறந்த மீன் பிடி கூட்டாளியாக விளங்கினேன்.

வளையாத மெல்லிய மூங்கில் கழிகளை வாங்கி, நன்றாக சீவி எண்ணெய் தடவி சூட்டில் பதப்படுத்தி குடிசையின் உத்திரத்தில் கல் கட்டி தொங்கவிடுவது. கொடுவா போன்ற மீன் வேட்டைக்காக தடித்த மூங்கில்களை வாங்கி நன்றாக சீவி, நெருப்பில் பதப்படுத்தி பூமியில் பரப்பி பெரிய பாறைகளை வைப்பது. தூண்டில், முள் மற்றும் தக்கைகள், தக்கை எடைக்கான ஈயக் கற்கள் என்று சகலமும் தயாரிக்க கற்றுக் கொடுத்தார் என் தந்தையார்.

ஓய்வு நேரங்களில் தந்தையாரோடு எண்ணூர் கடற்கழிக்கு செல்வேன். எங்கள் வீட்டுக்கு இரவு உணவுக்காக தேவையான மீன்களோடு திரும்புவோம்.

நாளாக… நாளாக.. திறம்பட மீன் பிடிக்கும் கலையையும் கற்றுக் கொண்டேன் என்பதெல்லாம் உபரி செய்திகளாகும்.
 
மீன்பிடித்தலுக்கான இந்த வேட்டைத் திறன் மற்றும் காத்திருப்பு பிற்பாடு எனது வாழ்க்கையின் பல துறைகளில் உதவியது.

இறைவன் நாடினால் அடுத்த வைகறை நினைவுகளில் சோவியத் கரடியை கிடுகிடுக்க வைத்த குர்ஆன்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
 வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive